பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1243 

போல் வளைந்த, பூண்கட்டிய வில்லின் நாணைத் தட்டி ஒலியெழுப்பினான்; சேரார் நாள் உக்கன - பகைவரின் வாழ்நாட்கள் உதிர்ந்தன.

   (வி - ம்.) 'குலாய சிலை, செய்யப்பட்ட சிலை, நாண்பூண்ட சிலை' எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

   பிள்ளைகளையும் கட்டியங்காரனையும் சேரக் கோறலின் 'சேரார்' என்றார்.

( 97 )

வேறு

2199 கனிபடு மாழியி னாடன்
  காரிகை கவற்ற வந்து
குனிசிலை தோற்ற மன்னர்
  கொங்குகொப் புளிக்கு நீலப்
பனிமலர்க் காடு போன்றார்
  படர்சிலை தொடாத வேந்த
ரினிதினின் மலர்ந்த வேரார்
  தாமரைக் காடு போன்றார்.

   (இ - ள்.) கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற - கனியனைய இனிய மொழியாளின் அழகு (கேள்வியால்) வருத்துதலினாலே; வந்து குனிசிலை தோற்ற மன்னர் - வந்து வளைந்த வில்வலிமை யிழந்த மன்னர்கள்; கொங்கு கொப்புளிக்குங் பனி நீலமலர்க்காடு போன்றார் - தேனை உமிழும் குளிர்ந்த நீலமலர்ச் செறிவைப் போன்றனர்; படர்சிலை தொடாத வேந்தர் - துன்பந் தரும் அவ்வில்லைத் தொடாத மன்னர்கள்; இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரைக் காடு போன்றார் - இனிமையாக மலர்ந்த எழுச்சி நிறைந்த தாமரையின் நெருக்கத்தைப் போன்றனர்.

   (வி - ம்.) சீவகனைக் கண்ட மன்னர் நிலை கூறியவாறு. வில்லைத் தொட்ட மன்னர் வாடினர்; வில்லைத் தொடாத மன்னர் மகிழ்ந்தனர்.

( 98 )
2200 போர்த்தகல் விசும்பில் வந்து
  பொறித்திரி பன்றி மூன்று
நீர்த்தகப் புணர்ந்த போதி
  னெடுந்தகை மூன்று மற்றுச்
சூர்த்துடன் வீழ நோக்கிச்
  சுடுசரஞ் சிதற வல்லா
னோர்த்தொன்றே புணர்ப்ப நாடி
  யொருபகல் காறு நின்றான்.