பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 125 

தாள் - (அதனால்) அவள் கண்விழித்தாள்; கனவின் இயல்மெய் எனும் பெண்மயம் ஓ மடவாய்க்குப் பெரிது என - (அப்போது) மடவாய் நினக்குக் கனவின் தன்மையை மெய்யெனக் கருதும் பெண்ணியல்பு ஓ பெரிதாக இருந்தது என்று; பண் உரையாற் பரவித் துயர் தீர்த்தான் - புனைந்துரையாற் புகழ்ந்து துயர் நீக்கினான்.

 

   (வி - ம்.) ஏகாரம் : ஈற்றசை. ஓ : வியப்பு.

 

   [பண் உரை - கற்பனை மொழி.] ”மார்புறவே” என்பதும் பாடம்.

( 199 )
229 காதலன் காதலி னாற்களித் தாய்மலர்க்
கோதையங் கொம்பனை யார்தங் குழாந்தொழத்
தாதுகு தாம மணிந்தகில் விம்மிய
போதுகு மெல்லணைப் பூமகள் சோ்ந்தாள்.

   (இ - ள்.) காதலன் காதலினால் களித்து - காதலன் கொண்டாட்டத்தாலே களித்து; ஆய்மலர்க் கோதை அம் கொம்பனை யார் தம் குழாம் தொழ - ஆய்ந்த மலர்மாலையணிந்த அழகிய பூங்கொடியனைய சேடியர் திரள் வணங்க; தாதுஉகு தாமம் அணிந்து அகில் விம்மிய போதுஉகு மெல்லணைப் பூமகள் சேர்ந்தாள் - மகரந்தப்பொடி சிந்தும் மாலை சூழ்ந்து, அகிற்புகை யூட்டப்பெற்று, மலர்கள் பரப்பிய மெல்லிய அணையைப் பூமகள் போன்ற விசயை அடைந்தாள்.

( 200 )
230 பண்கனி யப்பரு கிப்பய னாடகங்
கண்கனி யக்கவர்ந் துண்டுசின் னாள்செல
விண்கனி யக்கவின் வித்திய வேற்கணி
மண்கனிப் பான்வள ரத்தளர் கின்றாள்.

   (இ - ள்.) பண்கனியப் பருகி - இசையினைப் பழுக்கக் கேட்டும்; பயன் நாடகம் கண்கனியக் கவர்ந்து உண்டு - பயன்தரும் நாடகங்களைக் கண்ணுருக முகந்து நுகர்ந்தும்; சில்நாள் செல - (இருவர்க்கும் இங்ஙனம்) சிலநாட்கள் சென்ற அளவிலே; விண்கனியக் கவின் வித்திய வேல்கணி - விண்ணவர் உருக அழகைப் பரப்பிய வேற்கண்ணாள்; மண் கனிப்பான் வளரத் தளர்கின்றாள்- நிலவுலகை உருக்குமவன் வளர்தலாலே தளர்ச்சி உறுகின்றாள்.

 

   (வி - ம்.) விண் : ஆகுபெயர். வித்திய - பரவிய. குழவிப் பருவத்தாலும் அரசியலாலும் வீடுபேற்றாலும் மண்ணை உருக்குமவன்.

( 201 )