பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1250 

2212 கோல்பொரு கொடுஞ்சிலை குருதி வெம்படை
மேலவ ரடக்குபு வேழ மேறலின்
மாலிரு விசும்பிடை மணந்த வொண்கொடி
கால்பொரு கதலிகைக் கான மொத்தவே.

   (இ - ள்.) மேலவர் - யானையின் மேலாட்கள்; கோல்பொரு கொடுஞ்சிலை - அம்படை எய்யும் வளைந்த வில்லையும்; குருதி வெம்படை - குருதி தோய்ந்த பிற படைகளையும்; அடக்குபு வேழம் ஏறலின் அடக்கிக் கொண்டு யானைமீது ஏறலின்; மால் இரு விசும்பிடை மணந்த ஒண்கொடி - பெரிய வானத்திலே கலந்த சிறந்த கொடிகள்; கால் பொரு கதலிகைக் கானம் ஒத்த காற்றினால் தாக்கப்பட்டு இலை கிழிந்த வாழைக் காட்டைப் போன்றன.

   (வி - ம்.) இவ்விரண்டு செய்யுட்களும் யானைப் படையைக் கூறின.

   கோல் - அம்பு. குருதிதோய்ந்த படை என்க. மேலவர் - யானையின் மேல் ஏறும் மறவர். மாலிரு : ஒருபொருட் பன்மொழி. கதலிகை - வாழை.

( 111 )
2213 குடையுடை நிழலின் கோல மார்ந்தன்
கிடுகுடைக் காப்பின கிளர்பொற் பீடிகை
யடிதொடைக் கமைந்தன வரவத் தோ்த்தொகை
வடிவுடைத் துகின்முடி வலவர் பண்ணினார்.

   (இ - ள்.) குடையுடைய நிழலின - மேலே நாட்டிய குடையினுடைய நிழலில்; கோலம் ஆர்ந்தன - ஒப்பனை நிறைந்தன; கிடுகு உடைக் காப்பின - அம்புபடாமல் கிடுகினால் காவல் செய்யப்பட்டன; கிளர்பொன் பீடிகை அடிதொடைக்கு அமைந்தன - விளங்கும் பொன் பீடிகைகள் அடிவைத்தற்கும் அம்பு தொடுத்தற்கும், அமைவுற்றன; அரவத்தேர்த் தொகை - ஒலியுறும் தேர்த்திரளை; வடிவுடைத் துகில் முடிவலவர் பண்ணினார் - ஆடையால் அழகிய தலைக்கட்டினையுடைய தேர்வலவர்கள் பண்ணுறுத்தனர்.

   (வி - ம்.) குடை - மேலே நாட்டியகுடை.. கிடுகு - ஒருபடைக்கலன் நடுப்புக்கருவி அடிக்கும் தொடைக்கும் என்க. தொடை - தொடுத்தல். அரவம் - ஆரவாரம்.

( 112 )
2214 கொய்யுளைப் புரவிகள் கொளீஇய திண்ணுகம்
பெய்கயி றமைவரப் பிணித்து முள்ளுறீஇச்
செய்கயி றாய்ந்தன சிலையு மல்லவுங்
கையமைத் திளைஞருங் கருவி வீசினார்.