பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1251 

   (இ - ள்.) கொய் உளைப் புரவிகள் கொளீஇய திண்நுகம் கத்தரித்த உளையையுடைய புரவிகள் பூட்டிய திண்ணிய நுகத்தில்; பெய்கயிறு அமைவரப் பிணித்து பெய்த கயிற்றைப் பொருந்துதல்வரக் கட்டி முள் உறீஇச் செய்கயிறு ஆய்ந்தன - முள்ளுறுத்தி வாய்க்கயிறும் ஆராய்ந்து பிடிக்கப்பட்டன; இளைஞரும் சிலையும் அல்லவும் கை அமைத்துக் கருவி வீசினார் - அப்போது தேர் வீரரும் வில்லையும் ஒழிந்த படைகளையும் கையிலே அமைத்துக் கவசத்தை அணிந்தனர்.

   (வி - ம்.) முற்செய்யுளில் வலவர் தேர் பண்ணினர் என்றார். அதனை இச்செய்யுளில் விளக்கி, வீரர் படையமைத்துக் கவசம் அணிந்ததையும் கூறினர்.

( 113 )
2215 பறந்திய றருக்கின பரவை ஞாட்பினுட்
கறங்கெனத் திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி யறிகெனப் பெரிய நூலவர்
குறங்கெழுத் துடையன குதிரை யென்பவே.

   (இ - ள்.) பறந்து இயல் தருக்கின - பறந்து செல்வதிலே செருக்குற்றன; பரவை ஞாட்பினுள் கறங்கு எனத் திரிவன - பரவி போரிலே காற்றாடி எனத் திரிவன; கவரி நெற்றிய - கவரி அமைந்த நெற்றியுடையன; பிறந்துழி அறிக எனப் பெரிய நூலவர் குறங்கெழுத்து உடையன - பிறந்த இடத்தை அறிக என்று உயர்ந்த நூலறிஞர் துடையிலே எழுதிய எழுத்தை உடையன; குதிரை - குதிரைகள்.

   (வி - ம்.) என்ப : அசை.

   தருக்கின - செருக்குடையன. ஞாட்பு - போர்க்களம். கறங்கு - காற்றாடி. கவரி - சாமரை. பிறந்துழி - பிறந்த இடம். நூல் - குதிரை நூல்.

( 114 )
2216 கொன்னுனைக் குந்தமுஞ் சிலையுங் கூர்நுதி
மின்னிலை வாளொடு மிலேச்ச ரேறலிற்
பொன்னரிப் புட்டிலுந் தாரும் பொங்குபு
முன்னுருத் தார்த்தெழப் புரவி மொய்த்தவே.

   (இ - ள்.) கொல்நுனைக் குந்தமும் சிலையும் கூர்நுதி மின்நிலை வாளொடு - கொல்லுதற்குரிய முனையையுடைய குந்தமும் வில்லும் கூரிய முனையையுடைய மின்னின் இயல்பையுடைய வாளும் கொண்டு; மிலேச்சர் ஏறலின் - மேலாளராகிய மிலேச்சர் ஏறுதலின்; பொன் அரிப் புட்டிலும் தாரும் பொங்குபு-கொன் பரல்களையுடைய கெச்சையும், கிண்கிணி மாலையும் பொங்கி;