பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1254 

   களும் ; ஐந்தரைக் கச்சம் ஆகும் - ஐந்தரைக் கச்சம் தொகையின; எழில்மணிப் புரவி ஏழாம் இலக்கம் - அழகிய மணிகட்டிய குதிரைகள் ஏழுநூறாயிரமாகும்; கழல் மலிந்து இலங்கும் காலாள் ஏழ்தேவகோடி - வீரக்கழல் மிகுந்து விளங்கும் காலாட்படை ஏழுதேவ கோடியாகும்.

( 119 )

வேறு

2221 குலங்கெழு மகளிர்தங் கோல நீப்பவு
மலங்குளைப் புரவியுங் களிறு மாளவு
நிலமக ணெஞ்சுகை யெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்த தெஃகமே.

   (இ - ள்.) குலம்கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும் - நற்குலப் பெண்டிர் தம் ஒப்பனையை விடவும்; அலங்கு உளைப் புரவியும் களிறும் மாளவும் - அசையும் உளையையுடைய குதிரைகளும் களிறுகளும் இறக்கவும்; நிலமகள் கை எறிந்து நெஞ்சு நையவும் - நிலமடைந்தை தன் கையாலே மோதிக்கொண்டு உளம் வருந்தவும்; புலமகன் சீறினன் - அறிவாளியான சீவகன் சினந்தான்; எஃகம் புகைந்தது - அவன் வேலும் புகைந்தது.

   (வி - ம்.) தன் கணவராகிய மன்னர் படுதலின் நிலமகள் வருந்தினள். 'நிலமகள் அழுத காஞ்சியும்' (புறநா. 365) என்றார் புறத்தினும். 'புலமகன்' என்றார் ஆசிரியன் சொற்படி ஓராண்டுஞ் சென்றே சீறலின்.

   குலமகளிர் கோலநீப்பவும் என்றது மறவர்கள் மாளவும் என்னும் குறிப்பிற்று.

( 120 )
2222 குணில்பொரக் குளிறின முரசம் வெள்வளை
பணைபரந் தார்த்தன பம்பை வெம்பின
விணையில வெழுந்ததாழ் பீலி யெங்கணு
முணையினாற் கடலக முழக்க மொத்தவே.

   (இ - ள்.) முரசம் குணில் பொரக் குளிறின - முரசங்கள் குணில் பொருதலின் முழங்கின; வெள்வளை பணைபரந்து ஆர்த்தன - வெள்வளையும் பணைகளும் பரவி ஒலித்தன; பம்பை வெம்பின - பம்பைகள் ஒலித்தன; எங்கணும் இணையில தாழ்பீலி எழுந்த - எங்கும் ஒப்பற்றனவாகிய சிறு சின்னங்கள் எழுந்தன; முணையினால் கடலக முழக்கம் ஒத்த - இவ்வோசை மிகுதியாலே கடலிடத்து முழக்கைப் போன்றன.

   (வி - ம்.) பணை : முரசில் ஒருவகை. பம்பை : வாச்சியத்தில் ஒன்று. முணை மிகுதி; பெருக்கம்.

( 121 )