பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1260 

டால் உழப்பட்ட - ஒளி மணிக்கலன் புனைந்த முலைக்கோட்டினால் உழப்பட்ட ; மொய்ம்மலர்த்தார் அகல் மார்பர் - நெருங்கிய மலர்த்தாரையுடைய அகன்ற மார்பினர்; மலைக்கோட்ட எழில் வேழம் தவநூறி - மலைக் குவடுகளின் தன்மையை உடையனவாகிய அழகிய யானைகளை அழியக் கெடுத்து; மதயானைக் கொலைக் கோட்டால் - அந்த யானைகளின் கொம்பினால், உழப்பட்டு குருதியுள் குளித்தனர் - உழப்படுதலாலே குருதியிலே மூழ்கினர்.

   (வி - ம்.) கோடு - பக்கம். கலையை உடைய அல்குல்.

   கலை - மேகலை. கணம் - திரட்சி. முலையாகிய கோடு மார்பர் - மறவர். தவ - அழிய. தவ - மிகுதிப்பொருள் குறித்த உரிச்சொல்லுமாம்.

( 133 )
2235 மணமாலை மடந்தையர்த
  மெல்விரலாற் றொடுத்தணிந்த
விணர்மாலை யிருங்குஞ்சி
  யீர்ங்குருதிப் புனலலைப்ப
நிணமாலைக் குடர்சூடி
  நெருப்பிமையா நெய்த்தோரிற்
பிணமாலைப் பேய்மகட்குப்
  பெருவிருந் தயர்ந்தனரே.

   (இ - ள்.) மணமாலை மடந்தையார் - மணம் புரிந்த இயல்பினையுடைய மகளிர்; தம் மெல்விரலால் தொடுத்து அணிந்த தம் மெல்லிய விரல்களால் தொடுத்து அணிந்த; இணர்மாலை இருங்குஞ்சி ஈர்ங் குருதிப் புனல் அலைப்ப பூங்கொத்துகளுடன் கூடிய மாலையையுடைய பெரிய சிகையை, இழுத்தோடும் செந்நீர் அலைத்திட; நிணமாலைக் குடர்சூடி - நிணவொழுங்கையுடைய குடரைச் சூடி; நெய்த்தோரில் நெருப்பு இமையா - அக் குருதிப் பெருக்கிலே நெருப்பென விழித்துக் கிடந்து; பிணமாலைப்; பேய் மகட்கு - பிணந்தின்னும் இயல்பையுடைய பேய்க்கு; பெருவிருந்து அயர்ந்தனர் - தம்மைப் பெருவிருந்தாக்கினர்.

   (வி - ம்.) 'ஈர்க்குங் குருதி' என்பது, 'ஈர்ங்குருதி' என ஆயிற்று

   மணமாலை என்புழி - மாலை, இயல்பு என்னும் பொருட்டு, இருங்குஞ்சி - கரியமயிர். நிணமாலை என்புழி - மாலை ஒழுங்கு என்னும் பொருட்டு. இமையா - இமைத்து. பிணமாலை - பிணம் தின்னும் இயல்புடைய. மாலை என்பது இயல்பு என்ற பொருளில் வந்தது. மண மாலை என்பதில் உள்ள மாலை மணத்திற்குரிய பூமாலையைப் புனைந்த மங்கையர் எனவும் பொருள் கொள்ளலாம்.

( 134 )