பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1267 

ஊட்டும் மார்பனாகிய விசயன்; பொன் தேர் கொடுஞ்சிலை அறுப்ப - மன்மதனுடைய அழகிய தேரையும் வளைந்த வில்லையும் துணிக்க; சீறி - அவன் சீறி; பொன்வரை புலியின் பாய்ந்து - பொன் மலையினின்றும் பாயும் புலிபோலத் தேரினின்றும் குதித்து; பூமிமேல் தோன்றினான் - நிலமிசை காணப்பட்டான்.

   (வி - ம்.) மன்மதன். இவன் மதனன்தம்பி. மழை - அப்புமாரி. தெழித்தனன் - முழங்கி : முற்றெச்சம். கொன் - அச்சம். மார்பன் - ஈண்டு விசயன். தேரையும் சிலையையும் என விரிக்க.

( 145 )
2247 நெற்றிமேற் கோல்கண் மூன்று
  நெருப்புமிழ்ந் தழுந்த வெய்யச்
சுற்றுபு மாலை போலத்
  தோன்றறன் னுதலிற் சூடிப்
பொற்றதோர் பவழந் தன்மேற்
  புனைமணி யழுத்தி யாங்குச்
செற்றெயி றழுந்தச் செவ்வாய்
  கௌவிவா ளுரீஇ னானே.

   (இ - ள்.) நெற்றிமேல் கோல்கள் மூன்று - (அம் மன்மதனின்) நெற்றியின்மேல் அம்புகள் மூன்றை; நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய - தீயைச் சொரிந்து அழுந்து மாறுவிட; தோன்றல் தன் நுதலில் மாலை போலச் சுற்றுபு சூடி - அவன் அவற்றைத் தன் நெற்றியிலே மாலை போலச் சூழ அணிந்து; பொற்றது ஓர் பவழந் தன் மேல் புனைமணி அழுத்தி யாங்கு - அழகிய தாகிய பவழத்திலே ஒப்பனை செய்த முத்தை அழுத்தினாற் போல; செற்று - சினந்து; எயிறு அழுந்தச் செவ்வாய் கௌவி - இதழிலே பற்கள் அழுந்துமாறு செவ்வாயை மடித்து; வாள் உரீ இயினான் - வாளை உருவினான்.

   (வி - ம்.) கோல் - அம்பு சுற்றுபு-சுற்றி. விசயன் எய்ய என்க. அத்தோன்றல் - அந்த மன்மதன். பொற்றது - பொலிவு பெற்றது. பவழம் வாய்க்கும்,. மணிஎயிற்றிற்கும் உவமை உரீ இனான் - உருவினான்.

( 146 )
2248 தோளினா லெஃக மேந்தித்
  தும்பிமே லிவரக் கையா
னீளமாப் புடைப்பப் பொங்கி
  நிலத்தவன் கவிழ்ந்து வீழக்
கீளிரண் டாகக் குத்தி
  யெடுத்திடக் கிளர்பொன் மார்பன்
வாளினாற் றிருகி வீசி
  மருப்பின்மேற் றுஞ்சி னானே.