பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1268 

   (இ - ள்.) எஃகம் தோளினால் ஏந்தி - அவ் வாளை அவன் கையாலே ஏந்தி; தும்பிமேல் இவர - விசயன் ஏறிய யானைமேற் சென்றானாக; மாப்பொங்கி நீள கையாற் புடைப்ப - அவ்வியானை சினந்து தன் கையாலே அடிக்க; அவன் கவிழ்ந்து நிலத்து வீழ - அவன் கவிழ்ந்து நிலத்தே வீழ; கீள் இரண்டு ஆகக் குத்தி எடுத்திட - (அவ்வியானை) மேலும் அவனைக் கூறு இரண்டாகும்படி குத்திக் கொம்பிலே எடுப்ப; கிளர் பொன் மார்பன் திருகி, வாளினால் வீசி - விளங்கும் பொன் மார்பனான அவன் சிறிது திருகி, வாளாலே வெட்டி; மருப்பின்மேல் துஞ்சினான் - அக் கொம்பிலே இறந்தான்.

   (வி - ம்.) 144 முதல் இதுவரை விசயனுடன் மதனனும் மன்மதனும் பொருது பட்டமை கூறினர்.

   எஃகம் - வாள். தும்பி - யானை. அவன் கவிழ்ந்து நிலத்து வீழ என மாறுக. இரண்டு கீள் ஆக என் மாறுக. கீள் - கீற்று; கூறு.

( 147 )
2249 நனைகலந் திழியும் பைந்தார்
  நான்மறை யாளன் பைம்பொற்
புனைகலக் குப்பை யொப்பான்
  புத்திமா சேனன் பொங்கி
வனைகலத் திகிரித் தோ்மேன்
  மன்னரைக் குடுமி கொண்டான்
கனையெரி யழலம் பெய்த
  கண்ணுதன் மூர்த்தி யொத்தான்.

   (இ - ள்.) நனை கலந்து இழியும் பைந்தார் நான்மறை யாளன் - அரும்புகள் இடையே கலக்கப்பட்டு அலர்ந்தவற்றிலிருந்து தேன் வடியும் பைந்தாரை யணிந்த அந்தணனும்; பைம் பொன் புனைகலக் குப்பை ஒப்பான் புத்திமா சேனன் - அணிந்த பொற்கலன்களின் தொகுதி போன்றவனுமாகிய புத்திசேனன்; பொங்கி - கிளர்ந்து; வனை கலத் திகிரித் தேர்மேல் மன்னரைக் குடுமி கொண்டான் - கலம் வனையும் திகிரிபோல வரும் தேர்மீது உலாவி அரசரை வென்றி கொண்டான்; கனை எரி அழல் அம்பு எய்த கண்ணுதல் மூர்த்தி ஒத்தான் - அப்போது அவன் மிகுதியாக எரிகிற அழலாகிய அம்பினை எய்து முப்புரத்தை எரித்த நெற்றிக்கண் இறைவனைப் போன்றான்.

   (வி - ம்.) 'நனை' என்பது தேனுமாம். புத்திமா சேனன் : மா : அசை.

   நனை-அரும்பு; தேனுமாம். கலந்து-கலக்கப்பட்டென்க. நான்மறை யாளன் என்றது புத்திசேனனை. குப்பை-தொகுதி. திகிரிபோல வட்ட