பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1286 

2278 பாகத்தைப் படாத நெஞ்சிற்
  பல்லவ தேய மன்னன்
சேவகன் சிங்க நாதன்
  செருக்களங் குறுகி னானே.

   (இ - ள்.) மேகலைப் பரவை அல்குல் வெள்வளை மகளிர் - மேகலையணிந்த பரப்புற்ற அல்குலையுடைய மாதர்களின்; செஞ்சாந்து ஆகத்தைக் கவர்ந்து கொண்ட அணிமுலைத் தடத்து வைகி - குங்குமச் சாந்தணிந்த மார்பினைக் கவர்ந்து எழுந்த அழகிய முலைகளிலே தங்கியும்; பாகத்தைப் படாத நெஞ்சின் - அவர்கள்பால் செல்லாத நெஞ்சினையுடைய; பல்லவ தேய மன்னன் சேவகன் - பல்லவ நாட்டு வேந்தன் உலோகபாலனுடைய பணியாளாகிய; சிங்கநாதன் செருக்களம் குறுகினான் - சிங்கநாதன் என்பவன் போர்க்களத்தை அடைந்தான்.

   (வி - ம்.) முற்செய்யுளிற் கூறிய எஃகம் ஏந்திய காளையும், இச்செய்யுளிற் கூறிய சிங்கநாதனும் ஒருவனே, தனியே வந்து நின்றவன் எதிர்ப்பாரின்மையின், தானே செருக்களத்தை அடைந்தான். வைகி : எச்சத்திரிபு. குருகுலத்தை விளக்கலானும், சீவகற்கும் உலோகபாலற்கும் இறைவனாதலானும் கோவிந்தனை வாழ்த்தினான். பாகம் : பங்கம் எனினும் ஆம்.

( 177 )
2279 புனைகதிர் மருப்புத் தாடி
  மோதிரஞ் செறித்துப் பொன்செய்
கனைகதிர் வாளை யேந்திக்
  கால்கழ லணிந்து நம்மை
யினையன பட்ட ஞான்றா
  லிறைவர்க ணினைப்ப தென்றே
முனையழன் முளிபுற் கான
  மேய்ந்தென நீந்தி னானே.

   (இ - ள்.) புனைகதிர் மோதிரம் மருப்புத் தாடி செறித்து - ஒப்பனையும் ஒளியுமுடைய மோதிரத்தை யானைக் கொம்பாற் செய்த கைப்பிடியின் கண்ணே செறித்து; பொன்செய் கனைகதிர் வாளை ஏந்தி - அப் பிடியின்கண்ணே பொன்னிட்ட மிக்க ஒளியையுடைய வாளை ஏந்தி; கழல்கால் அணிந்து - கழலைக் காலில் அணிந்து; நம்மை இறைவர்கள் நினைப்பது இனையனபட்ட ஞான்றால் என்று - நம்மை அரசர்கள் நினைத்துக் கொண்டாடுவது இத்தன்மையவான வெற்றிகள் உண்டான நாள்களாலே என்று கருதி; முனைஅழல் முளிபுல் கானம் மேய்ந்து என நீந்தினான் - பேரழல் காய்ந்த புல்லையுடைய காட்டை மேய்ந்தாற் போலப் போரை அடர்த்துக் கடந்தான்.