பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1287 

   (வி - ம்.) இறந்துபடுதலைக் குறித்தலின் வாளை வாங்கினான்.

   மருப்புத்தாடி - யானைக்கொம்பாற் செய்த கைப்பிடி. இதனை - 'ஆசு', என்பர் நச்சினார்க்கினியர். காலிற் கழலணிந்து என்க. இறைவர் - மன்னர். முளிபுல் - உலர்ந்த புல்.

   பரவை - பரப்பு. ஆரம் - முத்துவடம். அருவிலை - கொடுத்தற்கரிய பெருவிலை. விழிப்ப - விளங்க.

( 178 )
2280 தாரணி பரவை மார்பிற்
  குங்கும மெழுதித் தாழ்ந்த
வாரமும் பூணு மின்ன
  வருவிலைப் பட்டி னங்க
ளோ்படக் கிடந்த பொன்ஞா
  ணிருள்கெட விழிப்ப வெய்ய
பூரண சேனன் வண்கைப்
  பொருசிலை யேந்தி னானே.

   (இ - ள்.) தார்அணி பரவை மார்பில் குங்குமம் எழுதி - மாலை அணிந்த அகன்ற மார்பிலே குங்குமத்தை யெழுதி; தாழ்ந்த ஆரமும் பூணும் மின்ன - தங்கிய முத்துவடமும் பூண்களும் மின்ன அணிந்து; அருவிலைப் பட்டுஇனங்கள் ஏர்படக் கிடந்த பொன்ஞாண் - அரிய விலையையுடைய பட்டாடைகளின் மேல் அழகுறக் கிடந்த அரைஞாண்; இருள்கெட விழிப்ப - இருளை நீக்க அணிதலாலே விளங்க; வெய்ய பூரணசேனன் வண்கைப் பொருசிலை ஏந்தினான் - போரிற் கொடியவனான பூரணசேனன் என்பவன் தன் வளம்பொருந்திய கையிலே வில்லை ஏந்தினான்.

   (வி - ம்.) பூரணசேனன் - ஒரு போர்மறவன். இவன் கட்டியங்காரன் படையிலுள்ளவன்.

( 179 )
2281 ஊனமர் குறடு போல
  விரும்புண்டு மிகுத்த மார்பிற்
றேனமர் மாலை தாழச்
  சிலைகுலாய்க் குனிந்த தாங்கண்
மானமர் நோக்கி னாரு
  மைந்தருங் குழீஇய போருட்
கானமர் காம னெய்த
  கணையெனச் சிதறி னானே.