(இ - ள்.) கூற்று என வேழம் வீழா - கூற்றுவனைப் போல யானைகளை வீழ்த்தி; கொடிநெடுந் தேர்கள் நூறா - கொடிகளை உடைய நீண்ட தேர்களைப் பிளந்து; ஏற்றவர் தம்மைச் சீறா - எதிர்ந்தவரைச் சினந்து தாக்கி; ஏந்திர நூழில் செய்யா - எந்திரம் போலக் கொன்று குவித்து; ஆற்றல் அம் குமரன் செல்வான் - வலிமையுறும் அப் பூரணசேனன் செல்கின்றவன்; அலைகடல் திரையின் நெற்றி - கடலலையின் முகட்டிலே; ஏற்று மீன் இரியப் பாய்ந்த - ஏறாகிய மீன்கள் ஓடும்படி பாய்ந்த; எறி சுறா ஏறு போன்றான் - தாக்கும் வன்மையுடைய சுறாமீனைப் போன்றான்.
(வி - ம்.) வீழா, நூறா, சீறா, செய்யா, என்பன செய்யா என்னும் வாய்பாட்டெச்சங்கள். வீழ்த்தி, நூறி, சீறி, செய்து என்க. ஏந்திரம் - இயந்திரம், நூழில் - கொன்று குவித்தல்.
(இ - ள்.) மகளிர்தம் குழாத்தில் மாலைக்கண் ஆம்பல் போலப் பட்டார் - மங்கையரின் திரளிலே மாலைக்கால அல்லிப் பூப்போல மகிழ்ச்சியிற் பட்டவர்கள்; கோல வாள் போருள் பட்டால் - அழகிய வாட் போரிலே சென்றால்; குறுமுயல் கூடு கண்டு - திங்களைக் கண்டு; சாலத் தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை நீரர் ஆயின் - மிகவும் வருந்துகின்ற, பொய்கையிலுள்ள தாமரைப் பூவின் தன்மையராயின்; ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றான் - உலகிலுள்ளோரின் வீரம் என்னாய் முடியும் என்று நகைத்தவாறு வருகின்றான்.
(வி - ம்.) மகளிர் குழாத்தின் புகும்பொழுது மாலைக்காலத்து ஆம்பல்போல் மகிழுமியல்புடைய மறவர் போர்க்களத்தே அம்மாலைப் பொழுதில் பனிக்கும் தாமரைப்போலத் துன்புறின் ஆண்மைத் தன்மை