பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1291 

காகப் பருந்து ஆரவாரிக்கச் செல்லும் பூரணசேனன்; சீர்த்தகையவனைக் கண்டு - சிறந்த தகுதியுடைய சிங்கநாதனைக் கண்டு; என் சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று - என்னுடைய சினமிகும் வேல் இன்னும் வயிறு நிறைந்திலது; உன்னை உயிர் ஊர்த்து உண்ணக் குறைவயிறு ஆரும் என்று - உன் உயிரை ஊற்றிப் பருகினாற் குறைவயிறு நிறையும் என்று; ஆங்கு ஆர்த்தவாய் நிறைய எய்தான் - அப்பொழுதே, ஆரவாரித்தவாய் நிறையும்படி அம்புகளை விடுத்தான்; அம்பு பெய்தூணி ஒத்தான் - (அதனாற்) பூரணசேனன் அம்பு வைக்கும் தூணியைப் போன்றான்.

   (வி - ம்.) நெய்த்தோரன் - குருதியையுடையவன். புலாலுக்காகப் பருந்து ஆர்ப்ப என்க. செல்வான்; வினையாலணையும் பெயர். சிங்கநாதன் என்க. சீர்த்தகையவன் என்றது சிங்கநாதனை. ஆர்ந்தின்று - நிறைந்ததில்லை. ஊர்த்து - ஊற்றி.

( 185 )
2287 மொய்ப்படு சரங்கண் மூழ்க
  முனையெயிற் றாளி போல
வப்பணைக் கிடந்த மைந்த
  னருமணித் திருவில் வீசுஞ்
செப்பிள முலையி னார்கண்
  சென்றுலாய்ப் பிறழச் சிந்திக்
கைப்பட வெடுத்திட் டாடும்
  பொலங்கழற் காயு மொத்தான்.

   (இ - ள்.) மொய்ப்படு சரங்கள் மூழ்க - மேலும் சிங்கநாதன் தொடர்ந்து செலுத்திய அம்புகள் நெருங்கச் சென்று மெய்யெலாம் மூழ்குதலின்; முனை எயிற்று ஆளிபோல - கூரிய பற்களையுடைய ஆளியைப்போல; அப்பு அணைக்கிடந்த மைந்தன் - கணைப் படுக்கையிலே கிடந்த பூரணசேனன்; அருமணித் திருவில் வீசும் செப்பு இளமுலையினர் கண் - அரிய மணிக்கலன்கள் வானவில்லென ஒளியைப் பரப்பும், செப்பையொத்த இளமுலையாரின் கண்கள்; சென்று உலாய்ப் பிறழ - சென்று உலவிப் பிறழும்படி; கைப்பட எடுத்திட்டுச் சிந்தி ஆடும் - கையினாலெடுத்துப் பரப்பி ஆடுகின்ற; பொலம் கழற்காயும் ஒத்தான் - பொன்னொளி தவழும் கழற்காயையும் போன்றான்.

   (வி - ம்.) 'பொலஞ் செப்பு' என்பர் நச்சினார்க்கினியர். 'பொற்பே பொலிவு' (தொல் - உரி - 37) என்றும், 'பொன்னென். கிளவி ஈறுகெட' (தொல் - புள்ளிமயங் - 69) என்றுஞ் சூத்திரஞ் செய்தமையின் பொலம் என்பது பொலிவு என்று பொருள்தராது என்று விளக்கங் கூறுவர். பொருந்துமேற் கொள்க. பூரணசேனன் - பொருதுபட்டான்.

( 186 )