பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1292 

2288 புனைகதிர்ப் பொன்செய் நாணிற்
  குஞ்சியைக் கட்டி நெய்த்தோர்
நனைகதி ரெஃக மேந்தி
  நந்தன்வாழ் கென்ன நின்ற
வினையொளிர் காளை வேலைக்
  கடக்கலார் வேந்தர் நின்றார்
கனைகடல் வேலை யெல்லை
  கடக்கலா வண்ண நின்றார்.

   (இ - ள்.) புனைகதிர்ப் பொன்செய் நாணின் - அழகிய கதிரையுடைய பொன்னாலான கயிற்றால்; குஞ்சியை கட்டி - தன் சிகையைக் கட்டி; நெய்த்தோர் நனை கதிர் எஃகம் ஏந்தி - குருதியால் நனைந்த வேலை ஏந்தி; நந்தன் வாழ்க என்ன - நந்தட்டன் வாழ்வானாக என்று; நின்ற வினையொளிர் காளை வேலைக் கடக்கலார் - நின்ற போரில் விளங்கும் காளையின் கையில் உள்ள வேலைக் கடக்க இயலாதவராய்; வேந்தர் நின்றார் - மன்னர்கள் நின்றவர்கள்; கனைகடல் வேலை எல்லை கடக்கலா வண்ணம் நின்றார் - ஒலிக்கும் கடற்கரையின் எல்லைக் கடக்கமாட்டாத தன்மைபோல் நின்றார்.

   (வி - ம்.) இவன், நந்தட்டன் பணியாள்.

   வினையொளிர்காளை - போர்த் தொழிலிடத்தே வெற்றியெய்திப் புகழ்படைத்த காளை. இவன் நந்தட்டனுடைய மறவன். வேலைக் கடவாது நின்ற மன்னர்க்குக் கரைகடவா தடங்கிய கடலுவமை.

( 187 )
2289 நின்றவப் படையு ளானே
  யொருமக னீலக் குஞ்சி
மன்றல மாலை நெற்றி
  மழகளி றன்றி வீழான்
வென்றியங் கொளிறும் வெள்வேன்
  மின்னென வெகுண்டு விட்டான்
சென்றவேல் விருந்து செங்கண்
  மறவனக் கெதிர்கொண் டானே.

   (இ - ள்.) அப்படையுளானே - கட்டியங்காரன் படையில் உள்ளவனேயான; மன்றல் மாலை நெற்றி மழகளிறு அன்றி வீழான் - மணத்தையுடைய மாலை அணிந்த நெற்றியையுடைய மழகளிற்றையன்றி வீழ்த்தாதவனாய்; நின்ற நீலக்குஞ்சி ஒரு மகன் - நின்ற கரிய முடியை உடைய ஒரு வீரன்; வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் - வென்றி கொண்டு புகழ் பரவி விளங்கும்.