பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1294 

2291 மட்டவிழ் மாலை போல
  மகிழ்ந்துபூண் மார்பத் தேற்றுக்
கட்டழ லெஃகஞ் செல்லக்
  கானெறி யாயி னானே.

   (இ - ள்.) வெள்வேல் அழல் விட்டுச் சிந்தி - நந்தட்டன் சேவகன் கையில் வேல் நெருப்பைவிட்டுச் சிந்தி; விசும்பின் வீழ் மின்னின் நொய்தா - வானிலிருந்து வீழும் மின்போல விரைந்துசெல்ல; கட்டழல் நெடுங்கண் யாதும் இமைத்திலன் - பேரழல்போலும் பெருங்கண்களைச் சிறிதும் இமைத்திலன்; கட்டழல் எஃகம் செல்ல - மேலும் வந்த அழல் போலும் வேல்கள் வர, (அவற்றையும்). மகளிர் ஓச்சும் மட்டு அவிழ் மாலை போல - பெண்கள் வீசிய தேன் விரியும் மலர்மாலையை ஏற்பதுபோல; மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்று - மகிழ்வுடன் அணிகலனுடைய மார்பிலே ஏற்று; கால் நெறி ஆயினான் - சாளரம் ஆகி நின்றான்.

   (வி - ம்.) சாளரம் ஆகிநின்றவன் கட்டியங்காரன் சேவகன். காற்றுப் போம் வழி சாளரம்; 'மான்கண் காலதர் மாளிகை யிடங்களும்' (சிலப். 5 - 8) என்றார் பிறரும். நந்தட்டன் சேவகன் விட்ட வேலை மகிழ்வுடன் ஏற்றுப் பட்டவன் கட்டியங்காரன் வீரன்.

( 190 )
2292 கவிமதங் கடந்து காமர்
  வனப்புவீற் றிருந்த கண்ணார்
குவிமுலை நெற்றித் தீந்தேன்
  கொப்புளித் திட்ட பைந்தார்ச்
செவிமதக் கடலங் கேள்விச்
  சீவகன் கழல்கள் வாழ்த்திச்
சவிமதுத் தாம மார்பிற்
  சலநிதி தாக்கி னானே.

   (இ - ள்.) சவி மதுத் தாம மார்பின் சலநிதி - செவ்வித் தேனையுடைய - மாலை மார்பனான சலநிதி யென்பவன்; கவிமதம் கடந்து காமர் வனப்பு வீற்றிருந்த கண்ணார் - கவிஞர் கொள்கையைக் கடந்து விருப்பூட்டும் அழகு தங்கியிருந்த கண்ணாருடைய; குவிமுலை நெற்றி - குவிந்த முலைத் தலையிலே; தீ தேன் கொப்புளித்திட்ட பைந்தார் - இனிய தேனைக் கொப்புளித்திட்ட பசிய தாரினையும்; செவி மதக் கடல் அம் கேள்வி - கேட்டோர் செவிக்குப் பொருந்துவதாகிய கடல் போலும் கேள்வியையும் உடைய; சீவகன் கழல்கள் வாழ்த்தி - சீவகனுடைய, கழலணிந்த அடிகளை வாழ்த்தி; தாக்கினான் - போரைத் தொடங்கினான்.