பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1297 

2296 செருவிளை கழனி மள்ள
  ரார்ப்போடு சிவணிச் செம்பொற்
புரிவளை முரச மார்ப்பப்
  போர்த்தொழி றொடங்கி னானே.

   (இ - ள்.) கருவளி முழக்கும் - பெருங்காற்றின் ஒலியும்; காரும் கனை கடல் ஒலியும் கூடி - காரின் ஒலியும் கடல் ஒலியும் கூடியதோடு; அருவலிச் சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன - அரிய ஆற்றலையுடைய சிங்கத்தின் முழக்கும் அவ்விடத்தே சேரக் கூடியது என்னும்படி; செருவிளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணி - போர்விளையும் நிலத்திலே போருழவர் ஆரவாரத்துடன் பொருந்தி; செம்பொன் புரிவளை முரசம் ஆர்ப்ப - செம்பொன்னாலணியப்பட்ட சங்கும் முரசும் முழங்க; போர்த் தொழில் தொடங்கினான் - போர்த் தொழிலை மேற்கொண்டான்.

   (வி - ம்.) கருவளி - பெருங்காற்று. கார் - முகில். கனைகடல் : வினைத்தொகை. செருவிளைகழனி என்றது போர்க்களத்தை. சிவணி - பொருந்தி.

( 195 )
2297 அரசர்த முடியும் பூணு
  மாரமும் வரன்றி யார்க்கு
முரசமுங் குடையுந் தாரும்
  பிச்சமுஞ் சுமந்து மாவும்
விரைபரித் தேரு மீர்த்து
  வேழங்கொண் டொழுகி வெள்ளக்
குரைபுனற் குருதி செல்லக்
  குமரன்விற் குனிந்த தன்றே.

   (இ - ள்.) குரைபுனல் குருதி வெள்ளம் - ஒலிக்கும் நீர் போலும் குருதிப் பெருக்கு; அரசர் தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி - அரசருடைய முடியையும் அணிகலனையும் ஆரத்தையும் வாரிக்கொண்டு; ஆர்க்கும் முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து-முரசையும் குடையையும் மாலையையும் பிச்சத்தையும் சுமந்து; மாவும் விரைபரித் தேரும் ஈர்த்து - குதிரையையும் விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரையும் இழுத்துக் கொண்டு; வேழம் கொண்டு ஒழுகி - களிற்றையும் மெல்லக் கொண்டு சென்று; செல்ல - நடக்கும்படி; குமரன் வில் குனிந்தது - சீவகன் வில் வளைந்தது.

   (வி - ம்.) இது பொருகின்ற முறைமை கூறிற்று.