பக்கம் எண் :

  1317 

11. பூமகள் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   இவ்வாறு பகைவரை வென்றுயர்ந்த சீவகன் முருகனைப் போன்று வாகைசூடித் தன் அரண்மனையிற் புகுந்தான். கட்டியங்காரன் மனைவிமாருள் ஒருத்தி கணவன் பட்டமையுணர்ந்து ஆருயிர் நீத்தனள். ஏனை மகளிர் சீவகனைக் காண அஞ்சினர். அவர்க்கெல்லாம் சீவகன் அபயமளித்துப் பெருநிதி வழங்கினன். நீவிர் விரும்பியவிடத்தே சென்று விரும்பிய வண்ணம் வாழ்மின் என்று விடுத்தனன். போரில் இறந்ததொழிந்த மறவர் மக்கட்கு வரிசை பல வழங்கினன். பின்னர்ச் சீவகன் துயில் கொண்டான்.

   மறுநாள் சீவகன் நீத்தெழுந்தவுடன் மங்கல நீராடி அணிகலன் அணிந்து அருகன் திருக்கோயிலை வழிபட்டனன். பின்னர் அரிமான் சுமந்த அரசுகட்டிலேறி அழகுற வீற்றிருந்தனன். தோழரும் உறவினரும் பிறரும் அரண்மனையில் வந்து குழுமினர். சீவகனுக்கு நன்முழுத்தத்தே மணிமுடி கவிக்க எண்ணினர். சுதஞ்சணன் என்னுந் தேவன் வானின்றிழிந்து வந்தனன். நன்முழுத்தத்தில் சீவகனுக்கு மணிமுடி சூட்டி வாழ்த்திச் சென்றான்.

   கொற்ற வெண்குடை நிழற்ற அரியணைமிசை அரசுவீற்றிருந்த சீவகன், தன்னாட்டில் பதினாறாண்டு அரசிறை தவிர்த்தனன். இறைவன் கோயிலுக்கும் மறையோர்க்கும் கணி கட்கும் இறையிலியாக நன்னிலங்களை வழங்கினன். கட்டியங்காரனால் இன்னலுற்றோர்க்கெல்லாம் நிலமுதலிய ஈந்து இன்ப முறுவித்தான்.

   நாட்டின்கண் பகையும் பசியுங் கெட்டன ; யாண்டும் மாந்தர் ஒருவனும் ஒருத்தியும் போன்று இன்புற்று வாழ்ந்தனர்.

2327 கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்.

   (இ - ள்.) கண்ணாடி அன்ன கடிமார்பன் - கண்ணாடி போன்ற வரைவினையுடைய மார்பனான சீவகன்; சிவந்து நீண்ட கண் ஆடி வென்று - சிவந்து நீண்ட கண்கள் எல்லோரிடமும் உலவி வென்றி கொண்டு; களம் கண்டு - போர்க்களத்தைப்