பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1323 

   மாகம் - முகிலுக்கு ஆகுபெயர்; மணிணையுடைய பாம்பென்க. ஆக மறவர், ஆகம்மறவர் என வண்ணத்தால் மகரவொற்று விரிந்து நின்றது, தோகை - மயில் : ஆகுபெயர். வெம்பா - வெம்பி. விழியா - விழித்து.

( 11 )
2338 செய்பாவை யன்னார் சிலம்பார்க்கு மென் சீற டியார்
செய்பூந் தவிசின் மிசையல்லது சேற லில்லார்
மையார்ந்த கண்ணீர் மணிப்பூண்முலை பாய விம்மா
வெய்தா மடவார் வெறுவெந்நிலத் தேகி னாரே.

   (இ - ள்.) செய் பாவை அன்னார் - செய்த பாவை போல் வார்; சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார் - சிலம்புகள் ஒலிக்கும் மெல்லிய சிற்றடியார்; செய் பூந்தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார் - புனையப் பெற்ற மலரணையின் மேலன்றிச் சென்றறியாதவர் ஆகிய; மடவார் - பெண்கள்; மைஆர்ந்த கண்ணீர் மணிப் பூண்முலை பாய வெய்துஆ விம்மா - மை தோய்ந்த கண்களிலிருந்து பெருகும் நீர் மணிக்கலன் அணிந்த முலைகளிற் பாய வெய்தாக அழுது; வெறுவெந் நிலத்து ஏகினார் - வெறுமையான கொடிய தரையிலே நடந்து சென்றனர்.

   (வி - ம்.) செய்பாவை : வினைத்தொகை. சிற்பிகளாலியற்றப் பட்ட பாவை என்க; திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். விம்மா - விம்மி.

( 12 )
2339 நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப்
பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள்
வருத்தம் மிழற்றிப் பசும்பொற்சிலம் போசை செய்யச்
செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார்.

   (இ - ள்.) நிலம் மோந்துழி நெருப்பு உற்றபோலச் செய்ய ஆகி - (அப்போது) தரையிற் பதிந்தபோது நெருப்பை மிதித்தன போலச் சிவந்தன வாகுதலால்; செருக்கு அற்ற மலர் பஞ்சி சீறடி - வாடின இலவமலரைப்போன்ற பஞ்சியூட்டின சிற்றடிகளில்; பருக்கென்ற கோல மரல் பல் பழம் போன்று - பருத்துக் காட்டின அழகிய மரலின் பல பழங்களைப்போன்று; கொப்புள் வருத்த - கொப்புளங்கள் வருத்தலால்; மிழற்றிப் பசும்பொன் சிலம்பு ஓசை செய்ய - அவ்வருத்தத்தைக் கூறிப் பொற்சிலம்பு ஒலி செய்ய; நோவச் சென்றார் - அவ்வடி நோம்படி சென்றனர்.

   (வி - ம்.) 'பருக்கென்ற' எனவே 'கொப்புளித்தன' ஆயின.

   நிலமோந்துழி - நிலத்திற் பட்டவிடத்து. நெருப்புற்றபோலச் செய்யவாகி என இயைக்க. மரலினது பழம் கொப்புளுக்குவமை, ”மரற்