பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1339 

2367 தேவ துந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பா
னாவி யம்புகை யணிகிளர் சுண்ணமோ டெழுந்த
நாவி னேத்தின ரரம்பையர் நரம்பொலி யுளர்ந்த
காவன் மன்னருங் கடிகையுங் கடவது நிறைத்தார்.

   (இ - ள்.) ஆவி அம்புகை அணிகிளர் சுண்ணமோடு - ஓமப் புகையொடும் அழகு விளங்கும் சுண்ணத்தோடும்; தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான் - வானவர்கட்கு இம் மகிழ்ச்சியைக் கொண்டு சென்று கூறுவதற்கு; தேவதுந்துபி எழுந்த - தெய்வ வாச்சியங்கள் எழுந்தன; அரம்பையர் நாவின் ஏத்தினர் - வான மங்கையர் நாவினாற் போற்றினர்; நரம்பு ஒலி உளர்ந்த - நரம்பொலி பாட்டுடன் வாசிக்கப்பட்டன; காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார் - காவலுடைய வேந்தரும் கடிகை வரும் தம் கடமையை நிரப்பினர்.

   (வி - ம்.) ஆவி : அவியென்பதன் விகாரம் மன்னர் கைக் காணிக்கை இட்டு வணங்கினார். கடிகையர் மங்கலம் பாடினர்.

   'நாவின் ஏத்துநர்' பாடமாயின், ஏத்துநராகிய அரம்பைய ரென்க.

( 41 )
2368 திருவ மாமணிக் காம்பொடு
  திரள்வடந் திளைக்கு
முருவ வெண்மதி யிதுவென
  வெண்குடை யோங்கிப்
பரவை மாநில மளித்தது
  களிக்கயன் மழைக்கட்
பொருவில் பூமகட் புணர்ந்தன
  னிமையவ னெழுந்தான்.

   (இ - ள்.) திருவ மாமணிக் காம்பொடு திரள்வடம் திளைக்கும் உருவ வெண்மதி இது என - அழகிய பெரிய மணிக்காம்புடன் திரண்ட முத்துவடமும் பயின்ற உருவினையுடைய வெண்திங்கள் இது வென்னுமாறு; வெண்குடை ஓங்கி - வெண்கொற்றக்குடை உயர்ந்து; பரவை மாநிலம் அளித்தது - கடல் சூழ்ந்த பெருநிலத்தைக் காத்தது; களிக்கயல் மழைக்கண் பொருஇல் பூமகள் புணர்ந்தனன் - மகிழ்ந்த கயல்போலும் மழைக்கண்களையுடைய ஒப்பற்ற நிலமகளைச் சீவகன் தழுவினான்; இமையவன் எழுந்தான் - சுதஞ்சணனும் தன்னுலகு செல்லப் போயினான்.

   (வி - ம்.) திருவ : அ : அசை. காம்பும் வடமும் திளைக்கும் மதி : இல்பொருளுவமை. குடையும் முடிபுனை மங்கலப் பொருள்களில் ஒன்று.

( 42 )