பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1345 

   சேர்க்க. ‘கோத்லைத் தரும் நிதியம்‘ என்பது ‘கோத்தரு நிதியம், என விகாரப்பட்டது. அரசன் கூறாதன தான் கூறினானல்லன்; அவன் அரசாட்சி பெற்றாற் செய்யும் அறங்களாகத் தனக்கு முற்கூறியவற்றைப் பின் தான் சாற்றுவித்தான் என்க.

( 50 )
2377 திருமக னருளப் பெற்றுத்
  திருநிலத் துறையு மாந்த
ரொருவனுக் கொருத்தி போல
  வுளமகிழ்ந் தொளியின் வைகிப்
பருவரு பகையு நோயும்
  பசியுங்கெட் டொழிய விப்பாற்
பெருவிறல் வேந்தர் வேந்தற்
  குற்றது பேச லுற்றேன்.

   (இ - ள்.) திருமகன் அருளப் பெற்று - (இவ்வாறு) அரசன் அருளப் பெறுதலின்; திருநிலத்து உறையும் மாந்தர் - அவனுடைய அழகிய நாட்டிலே வாழும் மக்கள்; ஒருவனுக்கு ஒருத்திபோல உளம் மகிழ்ந்து - ஒருவனுக்கு ஒருத்திபோல மனங்களித்து; ஒளியின் வைகி - புகழுடன் தங்குதலால்; பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய - துன்புறுத்தும் பகையும் பிணியும் பசியும் கெட்டு விலக (அரசாளும் நாளிலே) இப்பால் - இனி; பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசலுற்றேன் - பேராற்றலையுடைய மன்னர் மன்னனான சீவகனுக்கு நிகழ்ந்ததை இயம்பத் தொடங்கினேன்.

   (வி - ம்.) திருமகன் : சீவகன், அன்பான் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் கூடிய வழி உளமகிழ்ந்திருத்தல் போன்று மகிழ்ந்து என்றவாறு. வைகி - வைக. ஒளி - புகழ். வேந்தர் வேந்தன் : சீவகன்.

( 51 )

பூமகள் இலம்பகம் முற்றிற்று.