பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1348 

   ஆலமரத்திற்குப் பீடமமைத்து ஐந்தூரை அதற்கு இறையிலியாக விட்டான். இவ்வாறு நல்லறம் பலவு மியற்றி நாடின்புற அருளாட்சி செய்தனன்.

2378 அலங்க லேந்திய குங்கும வருவரை மார்பன்
கலந்த காரிகை யவர்களைத் தருகென வருள
விலங்கு மாலைவெள் ளருவிய வெழில்வரை மணந்த
புலம்பு நீள்சுரம் போய்க்கொணர்ந் தருளொடுங் கொடுத்தார்.

   (இ - ள்.) அலங்கல் ஏந்திய குங்கும அருவரை மார்பன் - மாலையை அணிந்த குங்கும மலைபோலும் மார்பன்; கலந்த காரிகையவர்களைத் தருக என அருள - தான் மணந்த மகளிரைத் தருவீராக என்று அருளிச் செய்ய; இலங்கும் மாலை வெள்அருவிய எழில்வரை மணந்த - விளங்கும் மாலை போன்ற வெள்ளிய அருவியை உடையனவாகிய அழகிய மலைகள் கலந்த; புலம்பு நீள்சுரம் அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் - வருத்தமூட்டும் நீண்ட காட்டு வழியிலே அரசன் அருளுடன் சென்று கொணர்ந்து விடுத்தனர்.

   (வி - ம்.) அலங்கல் - மாலை. அருவரை - கடத்தற்கரிய மலை. மார்பன் : சீவகன். கலந்தகாரிகையர் என்றது - மனைவிமாரை. நீள்சுரம் - நெடிய பாலைவழி. அருளொடும் போய்க் கொணர்ந்து கொடுத்தார் என மாறுக.

( 1 )
2379 மோடு கொண்ணிலா முளைத்தெழு பருதிகண் டறியாப்
பாடு வண்டொடு பறவையு நடுக்குறுங் காப்பின்
மாட மாமணிச் சிவிகையின் மயிலென விழிந்தார்
வீடு கண்டவர் போன்றுமின் னிடுகொடி யனையார்

   (இ - ள்.) மோடுகொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா - பெருமை கொண்ட நிலவையும் கடலிடைத் தோன்றி எழும் ஞாயிற்றையும் கண்டறியாத; பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின் - பாடுகின்ற வண்டும் பறவையும் அஞ்சுகின்ற காவலையுடைய; மாடம் மாமணிச் சிவிகையின் - மாடம் போன்ற பெரிய மணிகளாலாகிய பல்லக்கிலிருந்து; மின் இடு கொடி அனையார் - மின்னுக் கொடி போன்ற அம்மங்கையர்; வீடு கண்டவர் போன்று - பேரின்ப வீட்டைக் கண்டவரைப் போன்ற மகிழ்வுடன்; மயில் என இழிந்தார் - மயிலிழிந்தாற்போல இழிந்தனர்.

   (வி - ம்.) திங்களும் ஞாயிறுங் கண்டறியாத மாடத்தின் கண்ணே, காப்பினையுடைய சிவிகையினின்றும் இழிந்தனர் என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.