பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1350 

2382 வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்த
கானக் கார்முல்லை கார்மழைக் கெதிர்ந்தன போல
மான மங்கையர் வாட்டமும் பரிவுந்தங் கணவன்
றேனெய் மார்பகந் தீண்டலுந் தீர்ந்தொளி சிறந்தார்

   (இ - ள்.) வேனல் வாய்ப்பட்டு விரிமுகை தளிரொடு கரிந்த - கோடையில் அகப்பட்டு விரியும் முகையொடுந் தளிரொடுங் கரிந்த; கானக் கார்முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல - காட்டிலுள்ள முல்லைகள் கார்கால மழையை ஏற்றுக் கொண்டன போல; மான மங்கையர் வாட்டமும் பரிவும் - புலவியுடைய அம் மாதரார் அடைந்த மெய் வாட்டமும் மனப்பரிவும்; தம் கணவன் தேன்எய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து - தம் கணவனுடைய தேன் போன்ற மார்பைத் தீண்டின அளவிலே தெளிந்து; ஒளி சிறந்தார் - ஒளிமிக்கார்.

   (வி - ம்.) மழைக்கு : உருபு மயக்கம். தேனைப் போன்ற மார்பு என்றார், தேனுக்கு இன்சுவை நிகழ்ந்த காலத்தே புளிச்சுவை நிகழுமாறு போல, இம் மார்பும் இம் மகளிர்க்கு இன்பம் நிகழ்த்தின காலத்தே பிறர்க்கும் இவ்வாறாம் என்னும் கருத்தை அவர்க்குப் பிறப்பித்தலின்.

( 5 )
2383 சேலுண் கண்ணியர் சிலம்பொடு திலகமுந் திருத்தி
மாலை நல்லன மதுக்கமழ் தகையன மிலைச்சிக்
கோல மென்முலைக் குங்கும மிடுகொடி யெழுதிச்
சோலை வேய்மரு டோண்முத்துந் தொழுதக வணிந்தார்.

   (இ - ள்.) சேல் உண் கண்ணியர் - சேலனைய மையுண்ட கண்களையுடைய பணிமகளிர்; சிலம்பொடு திலகமும் திருத்தி - (தேவியர்க்குச்) சிலம்பிலிருந்து திலகம்வரை திருத்தி; மதுக்கமழ் தகையன நல்லன மாலை மிலைச்சி - தேன் மணக்குந் தகைமையன ஆகிய நல்ல மாலைகளைப் புனைந்து; கோல மென்முலைக் குங்குமம் இடுகொடி எழுதி - அழகிய மென்முலைகளின்மேற் குங்குமத்தாலே கொடி எழுதி; சோலை வேய்மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார் - சோலையிலுள்ள மூங்கில் மருளுந்தோளிலே முத்துவடத்தையும் கணவன் தொழுமாறு அணிவித்தனர்.

   (வி - ம்.) சேல் போன்ற கண். மையுண்கண் எனத் தனித்தனி கூட்டுக. சிலம்பு முதலாகத் திலக மீறாகவுள்ள எல்லா அணிகளையும் திருத்தி என்றவாறு. இடுகொடி - எழுதுங்கொடி; தொய்யில்.

( 6 )
2384 நஞ்சு மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல
வஞ்சி வாட்கண்கண் மதர்த்தன வலர்ந்துடன் பிறழப்
பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய
வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ.