பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1351 

   (இ - ள்.) இளங் களிக்கயல் நஞ்சு மேய்ந்து மதர்ப்பன போல - இளைய, களிப்புடைய கயல்மீன்கள் நஞ்சினைப் பருகிச் செருக்குவனபோல; வாள் கண்கள் அஞ்சி மதர்த்தன - வாள் போன்ற கண்கள் அஞ்சிச் செருக்கியவாய்; உடன் அலர்ந்து பிறழ - எல்லாம் தெளிந்து பிறழ; பஞ்சுசூழ் மணிமேகலை பரிந்தவை சொரிய - ஆடையிற் சூழ்ந்த மணிமேகலையில் அற்ற காசுகள் சிந்த; வஞ்சி நுண்இடை கவின்பெற வைகினன் - கொடி போன்ற நுண்ணிடை அழகுபெற (அவர்களுடன்) கூடியிருந்தனன்.

   (வி - ம்.) அவசத்தாற் பிறந்த அனந்தர் நோக்கினை ‘நஞ்சு‘ என்றார். உடன் - எல்லாம். பஞ்சு : ஆடைக்குக் கருவி ஆகுபெயர். தனது நுண்மையால் ஊற்றின்பம் பெறாத இடை, மெய் புகுந்தாலொத்த முயக்கத்தாலே (அகநா. 110 : 365 : 7) ஊற்றின்பம் பெறும்படி வைகுதலின், ‘நுண்ணிடை கவின்பெற‘ என்றார்.

( 7 )
2385 அரிபொற் கிண்கிணி யணிகிளர் சிலம்பொடு சிலம்புந்
திருவச் சீறடிச் செழுமலர்க் கொழுங்கயன் மழைக்க
ணுருவ நுண்ணிடை யொளிமணி வருமுலை யுருவா
ரெரிபொன் மேகலை யிலக்கணை கடிவினை நொடிவாம்.

   (இ - ள்.) அரி பொன் கிண்கிணி அணிகிளர் சிலம்பொடு சிலம்பும் - பரல் அணிந்த பொன்னாலான கிண்கிணியும் அழகு பொருந்திய சிலம்பும் ஒலிக்கின்ற; திருசீறடிச் செழுமலர்க் கொழுங்கயல் மழைக்கண் - திருவையுடைய சிற்றடித் தாமரையையும், கொழுவிய கயலனைய மழைக் கண்களையும்; உருவ நுண்இடை - உருவத்தால் நுண்ணிய இடையையும்; ஒளிமணி வருமுலை - ஒளிரும் முத்தணிந்த வளரும் முலைகளையும்; உருஆர் எரிபொன் மேகலை - அழகுற்ற விளங்கும் பொன்னாலான மேகலையையும் உடைய; இலக்கணை கடிவினை மொழிவாம் - இலக்கணையின் மணவினையை இனி மொழிவோம்.

   (வி - ம்.) திருவ : அ : அசை.

   அரி - பரல். “(அரி - ஐது) ஐதாகிய பொன்னாவது தகடு“ என்பர் நச்சினார்க்கினியர். திருவ : ஈற்றகரம் அசை. வருமுலை : வினைத்தொகை. உரு - அழகு. கடிவினை - மணத்தொழில்.

( 8 )
2386 ஆழி மால்கட லகன்பெருங் கேள்விக டுறைபோ
யூழி னன்றியு முறுவினை யோரையின் முடிப்பான்
சூழி யானையுந் துளங்குபொற் சிவிகையு முடையான்
வேழ வேந்தற்கு விழுப்பெருங் கணிவிரித் துரைத்தான்.

   (இ - ள்.) ஆழி மால்கடல் அகன்பெருங் கேள்விகள் துறைபோய் - கரையையுடைய பெரிய கடல்போன்ற பெரிய