பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1356 

கலந்த மணி முதலியவற்றைப் போக்கி; வெண்சாந்தினால் மண் விளக்கி - வெண்மையான சாந்தினால் தரையை மெழுகி; மலர்ப்பலி சிந்தினார் - (இல்லுறை தெய்வத்திற்கு) மலர்ப் பலியையும் சிந்தினார்.

   (வி - ம்.) விண் - ஆகுபெயர் விளக்குதல் - துடைத்துத் தூய்மை செய்தல் கண்விளக்கி - தகுதிபற்றிய வழக்கு. மண்விளக்கி - மண்ணைமெழுகி. மலர்ப்பலி - மலராகிய பலி. இல்லுறை தெய்வத்திற்குப் பலி சிந்தினார் என்க.

( 17 )
2395 ஆய்ந்த மோட்டின வான்படு பாலுலை
போந்து பொங்கிய வாவியி னாற்பொலிந்
தேந்து மாடங்க டாமிழி னென்பன
பூந்து கில்புறம் போர்த்தன போன்றவே.

   (இ - ள்.) இழின் என்பன ஏந்தும் மாடங்கள் தாம் - இழின் என்னும் ஓசையை உடைய உயர்ந்த மாடங்கள் தாம்; ஆய்ந்த மோட்டின ஆன்படு பால்உலை போந்து பொங்கிய ஆவியினால் பொலிந்து - அழகிய வயிற்றையுடையவாகிய ஆவினிடங் கிடைத்த பால்உலை பானையின் புறத்தே போந்து பொங்கிய ஆவியினாலே பொலிவுற்று; பூந்துகில் புறம் போர்த்தன போன்ற - அழகிய ஆடையைப் புறத்திலே போர்த்தன போன்றன.

   (வி - ம்.) ஆய்ந்த - அழகிய. மோட்டின - வயிற்றை யுடையன. மாடங்கள் அகத்தேயிருந்து புறம்போந்து சுற்றிய பாலாவியினால் அம் மாடங்கள் துகில்போர்தத்ன போல் தோன்றும் என்பதாம்.

( 18 )
2396 திருவி னல்லவர் செம்மலர்ச் சீறடி
பரவி யூட்டிய பஞ்சரத் தக்களி
விரவி மீநிலஞ் சோ்ந்தொளி பூத்துராய்க்
குருதி வானிலங் கொண்டது போன்றதே.

   (இ - ள்.) திருவின் நல்லவர் செம்மலர்ச் சீறடி - திருமகளினும் நல்லவர்களின் சிவந்த மலர்போலும் சிற்றடியை; பரவி ஊட்டிய அரத்தப் பஞ்சுக் களி - சேடியர் பரவி ஊட்டிய செம்பஞ்சியின் சேறு; மீநிலம் விரவிச் சேர்ந்து - நிலத்தின் மீது மிகுந்து சேர்தலின்; ஒளிபூத்து உராய் - அவ்வொளி பூத்துப் பரந்து; குருதிவான் நிலம் கொண்டது போன்றது - செக்கர்வான் நிலத்தைக் கொண்ட தன்மை போன்றது.

   (வி - ம்.) திருவினும் நல்லவர் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. திரு - திருமகள். செம்மலர் - செந்தாமரை மலர். பஞ்சு அரத்தக் களி எனக் கண்ணழிக்க. அரத்தம் - செந்நிறம். உராய் - பரந்து. குருதிவான் - செக்கர் வானம்.

( 19 )