பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1358 

ஒலி - பாடலில் எழும் இனிய ஒலியும்; பண் அமை யாழ் ஒலி - பண்ணமைத்த யாழின் ஒலியும்; மோடுகொள் முழவின் முழக்கு - பெருமை கொண்ட முழவின் ஒலி; ஈண்டிய - ஈண்டியிசைத்தலால்; மாநகர் மாக்கடல் ஒத்தது - அப் பெருநகரம் பெரிய கடலைப் போன்றது.

   (வி - ம்.) ஆடன் மங்கையர் - விறலியர். மோடு - பெருமை. மாநகர் - இராசமாபுரம்.

( 22 )
2400 சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுக
ளந்த ரத்தெழு மின்புகை யாலரோ
விந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வழி
வந்தி ருந்தது போன்மலி வுற்றதே.

   (இ - ள்.) சுந்தரத் துகள் பூந்துகள் பொன்துகள் அந்தரத்து எழும் இன் புகையால் - சிந்துரத் துகளாலும் பூந்துகளாலும் பொன்துகளாலும் வானில் எழும் இனிய புகையாலும்; இந்திரன் நகர் சாறு அயர்ந்து - அமராவதி நகரம் விழவு ஆற்றி; இவ்வழி வந்து இருந்தது போல் மலிவு உற்றது - ஈண்டு வந்து தங்கினாற்போல் இந் நகரம் பொலிவினால் மல்கியது.

   (வி - ம்.) சுந்தரத்துகள் - சிந்துரப்பொடி. பூந்துகள் - மகரந்தப் பொடி. பொற்றுகள் - பொற்சுண்ணம். இன்புகை - மணப்புகை. சாறு - திருவிழா .

( 23 )

வேறு

2401 நிரந்து கன்னலு நெய்யு நீந்தப்பெய்
திரந்து பாலமிர் தெங்கு மூட்டுவார்
பரந்து பூந்துகில் பன்ம ணிக்கலஞ்
சுரந்து கொள்கெனச் சுமக்க நல்குவார்.

   (இ - ள்.) எங்கும் நிரந்து கன்னலும் நெய்யும் நீந்தப் பெய்து பால் அமிர்து இரந்து ஊட்டுவார் - எங்கும் ஒழுங்காகக் கருப்பஞ் சாறும் நெய்யும் வெள்ளமெனப் பெய்து பாற்சோற்றை வேண்டிக் கொண்டு உண்பிப்பார்; பூந்துகில் பன்மணிக் கலம் சுரந்து கொள்க எனப் பரந்து சுமக்க நல்குவார் - அழகிய ஆடையையும் பல மணிக் கலன்களையும் தொலைவின்றிக் கொள்க என்று எங்கும் சென்று வேண்டி, அவர்கள் சுமக்கும் அளவு கொடுப்பார்.

   (வி - ம்.) நிரந்து - பரவி. கன்னல் - கருப்பஞ்சாறு. 'கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று' என்றார் பிறரும்.

( 24 )