பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1359 

2402 வருக்கை யின்பழம் வாழை யின்கனி
திருக்கொண் மாங்கனி தெளித்த தேறலைக்
கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்து
புரித்த தெங்கிள நீரும்பூ ரிப்பார்.

   (இ - ள்.) வருக்கை இன்பழம் வாழை இன்கனி திருக்கொள் மாங்கனி - பலவின் இனிய பழத்தையும் வாழையின் இனிய கனியையும் அழகுற்ற மாங்கனியையும்; தெளித்த தேறலைக் கருப்புச் சாற்றொடு கலந்து கைசெய்து - நீராக்கின தேறலை இனிய கருப்பஞ் சாற்றுடன் கலந்து சமைத்து (அதனையும்); புரித்த தெங்கு இளநீரும் பூரிப்பார் - விருப்புற்ற இளநீரையும் நிரப்பி வைப்பார்.

   (வி - ம்.) வருக்கை - பலாமரம்; வருக்கை முக்கனியுளொன்று.

( 25 )
2403 கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்.

   (இ - ள்.) கூந்தல் ஏந்திய கமுகங்காய்க் குலை - கமுக மரத்தின் உச்சியில் ஏந்திய பாக்குக் குலைகளையும்; ஆய்ந்த மெல்லிலை - சிறந்த வெற்றிலைகளையும்; பளிதம் ஆதிஆ - கருப்பூரம் முதலான முகவாசங்களையும்; மாந்தர் கொள்ளை கொண்டு உண்ண - மக்களெல்லோரும் மிகுதியாகக் கொண்டு தின்னும் படி; மாநிலம் ஏந்தலாம் படித்து அன்றி ஈட்டுவார் - நிலம் சுமக்க முடியாதபடி குவிப்பார்கள்.

   (வி - ம்.) முற்செய்யுள்களில் பாலடிசில் முதலிய உணவுப் பொருள்களைக் கொடுத்ததாகக் கூறியவர் ஈண்டு வெற்றிலை முதலிய முகவாசப் பொருள்களைக் கூறினார். உண்ணுதல் தின்னுதல் என்னும் பொருட்டு. நச்சினார்க்கினியர் 'மாநிலம் உண்ண' எனக் கூட்டுவர். அவர், 'வெற்றிலையை உண்ணவென்றல் மரபன்மையின், ஈண்டு மாநிலம் உண்ண எனவே மண்ணுண்ணும்படி என்னும் பொருட்டாம். அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான்' என்பது பன்மை பற்றிக் கூறிற்றெனல் வேண்டும்; பாகு பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின். இனி, 'மாந்தர் முற்கூறிய பாலடிசில் முதலியவற்றை உண்டலின், அவர் தின்றற்குப் பளித முதலியவற்றைக் கொள்ளை கொண்டு சுமக்கலாம் படித்தன்றாக ஈட்டுவா ரென்றலுமாம்,' என்பர்.

( 26 )
2404 தூம மார்ந்தன துப்பு ரவ்வுக
ளேம மாயின வேந்தி நிற்றலா
னாம நன்னகர் நன்பொற் கற்பகங்
காம வல்லியுங் களங்கொண் டிட்டதே.