பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1362 

கட்டி; ஆய்கதிர் அருங்கலப் பொடியினால் - சிறந்த ஒளியையுடைய அருங்கலன்களின் பொடியாலே; ஆய்பொன் பூமகள் மருங்குல் குயிற்றிய நகரில் - பொன்னணிந்த நிலமகளின் இடைபோலே நுடங்கும்படி கோலம் இட்ட இடத்திலே; பிணையல் மாலையார் மங்கலப் பெருந்தவிசு அடுத்தனர் - பிணைந்த மாலையணிந்த மகளிர் மங்கலமாகிய பெரிய தவிசை இட்டனர்.

   (வி - ம்.) பொன் பூமகள் - திருமகள் மணவறை நிலத்தைத் திருமகளின் இடைபோலப் புனைதல் வழக்கம், ஈண்டு நச்சினார்க்கினியர் பூமகள் என்பதற்கு நிலமகள் என்றே பொருள் கூறுகின்றனர். திருமகள் என்றலே சிறப்பென்பதனை.

”போரடு மன்னர்க்குப் புரையோர் புகழ்ந்த
பாசடைத் தாமரைத் தாதகத் துறையும்
மாசின் மடமகள் மருங்கின் வடிவாய்க்
குலாஅய்க் கிடந்த கோலக் கோணத்துக்
கலாஅய்க் கிடந்து கவ்விய கொழுந்தின்
வள்ளியு மலரும் கொள்வழிக் கொளீஇ
வலமுறை வகுத்த நலமுறை நன்னகர்”

   எனவரும் பெருங்கதைப் பகுதியான் (2. 4 : 79 - 85) உணரலாம்.

( 32 )
2410 நலங்கிளர் காணமு மணியு நன்பொனும்
வலம்புரி முத்தமுங் குவித்த மங்கல
மிலங்கின மணிவிளக் கெழுந்த தீம்புகை
கலந்தவா யிரத்தெண்மர் கவரி யேந்தினார்.

   (இ - ள்.) நலம் கிளர் காணமும் மணியும் நன்பொனும் வலம்புரி முத்தமும் குவித்த - அழகு விளங்கும் பொற்காசும் மணியும் பொன்னும் வலம்புரியிலிருந்து பிடைத்த முததும் குவிக்கப்பட்டன; மங்கலம் இலங்கின - என் மங்கலமும் விளங்கின; மணிவிளக்கு எழுந்த - மணிவிளக்குகள் எழுந்தன; தீ புகை கலந்த - இனிய புகைகள் கலந்தன; ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினார் - ஆயிரத்தெட்டு மகளிர் கவரி ஏந்தினர்.

   (வி - ம்.) காணம் - பொற்காசு. குவித்த : பலவறிசொல். குவிக்கப்பட்டன என்க. தீம்புகை - இனிய நறுமணப்புகை. கலந்த : பலவறி சொல்.

( 33 )
2411 மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்
மங்கல மன்னவன் வாழ்த்த வேறலு
மங்கல வச்சுதந் தெளித்து வாய்மொழி
மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார்.