பக்கம் எண் :

இலக்கணையார் இலம்பகம் 1364 

யணிந்த இலக்கணையை; நன்பொன் தாமரைப் பூக்கடி கோயிலாள் புலம்ப - சிறந்த பொற்றாமரைப் பூவாகிய மணமிகுங் கோயிலாளாகிய திருமகள் ஒவ்வேன் என வருந்த; நாள் மயிர்வினைக் கடி ஆக்கினார் - நல்ல நாளிலே மயிர்வினை மணத்தை ஆக்கினர்.

   (வி - ம்.) கடிக்கோயில் என்றும் பாடம். மயிர்வினை மணம் என்பது புருவம் ஒதுக்குதல் என்பர்.

   இங்ஙனம் மண மகட்குப் புருவமொதுக்கும் வாக்கத்தினை,

”எதிர்நோக் காற்றா இலங்கிழை முகத்தையும்
மதிமாசு கழீஇய வண்ணம் போலக்
கதிர்மே லிலங்கக் கைவினை முடித்தபின்”

   எனவரும் கதையானும் உணர்க; (2 - 4 : 180 - 2)

( 36 )

வேறு

2414 விரைத்தலை மாலை சூட்டி
  மின்னனா ரங்கை சேப்ப
வரைத்தசாந் தணிந்த கோட்ட
  வாயிரத் தெட்டு வேழ
நிரைத்தன மண்ணு நீர்க்கு
  முரசொடு முழவம் விம்ம
வரைத்தலைத் துவலை போன்று
  மதநில நனைப்ப வன்றே.

   (இ - ள்.) விரைத் தலைமாலை சூட்டி - மணமுற்ற தலைமாலையை அணிந்து; மின்னனைய மகளிர் தம் அகங்கை சிவப்ப அரைத்த சந்தனத்தை அணிந்த; கோட்ட - கொம்புகளையுடைய; ஆயிரத்து எட்டு வேழம் - ஆயிரத்தெட்டு யானைகள்; வரைத்தலைத் துவலை போன்று மதம் நிலம் நனைப்ப - மலையினிடத்து நீர்த்துளி போன்று பெய்யும் மதம் நிலத்தை நனைப்ப; முரசொடு முழவம் விம்ம - முரசும் முழவமும் முழங்க; மண்ணும் நீர்க்கு நிரைத்தன - மஞ்சனநீர் கொண்டுவா நிரையாக நின்றன.

   (வி - ம்.) விரை - மணம். அங்கை - உள்ளங்கை. சேப்ப - சிவக்கும்படி, மண்ணுநீர் - மங்கல நீராடற்குரிய நீர். மண்ணுநீர் ஆயிரத்தெட்டு யானைகள் மேலேற்றி வருதலை ”கோல் யானை நாலிரண்டு மிகையா ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம்” எனவரும் கதை யானும் (2 - 2 :202, 4) உணர்க. எட்டுடன் கூடிய நூறு ஆயிரம் முதலிய எண்களே சிறப்புடைத்தாதல் தெய்வ அருச்சனை முறையாற் காண்க.

( 37 )