பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1369 

என்ன - தூய மலர்கள் இன்றுடன் வீடு பெற்றன என்னும்படி; சுரும்புஉண் கண்ணி சூடினான் - அம் மலரையுடைய வண்டுகள் தேனைப் பருகுங் கண்ணியைச் சூடினான்.

   (வி - ம்.) 'ஈடு' என்பது 'இடுதல்' என்பதன் விகாரம் என்பர் நச்சினார்க்கினியர். 'வீடு பெற்றன என்றது, இவன் சூடிய மலர் பெற்ற அழகு தாம் குடுங்காலத்திற் பிறவாமை கண்டு, எல்லோரும் தம்மைச் சூடுந் தன்மையைக் கைவிடுதலை மலர் பெற்ற என்றவாறு' என்று விளக்கங் கூறுவர் அவர்.

( 46 )
2424 மற்ப கம்மலர்ந் தகன்ற மார்பின்மேல்
விற்ப கக்குலா யாரம் வில்லிடக்
கற்ப கம்மலர்ந் தகன்ற தோவெனப்
பொற்ப கப்பொலங் கலங்க டாங்கினான்.

   (இ - ள்.) மல்பக மலர்ந்து அகன்ற மார்பின் மேல் - மற்றொழில்தான், பிறரிடத்தினின்றும் போம்படி, தன்னிடத்தே பரக்கப்பட்டு அகன்ற மார்பின் மேலே; வில்பகக் குலாய் - வானவில் தோற்கும்படி குலாவி; ஆரம் வில் இட - முத்தாரம் ஒளியிடாநிற்க; கற்பகம் மலர்ந்து அகன்றதோ என - கற்பகம் பூத்துப் பரந்ததோ என்னும்படி; பொற்பு அகப் பொலங்கலங்கள் தாங்கினான் - அழகை அகத்தேயுடைய ஒழிந்த கலங்களை அணிந்தான்.

   (வி - ம்.) பக மலர்ந்து எனற்பாலது வண்ணநோக்கி வருமொழி மகரம் விரிந்து நின்றது. பக - நீங்க. வில் - இந்திர வில். பொற்பை அகத்தேயுடைய என்க.

( 47 )
2425 உருவ மார்ந்தன வுரோமப் பட்டுடுத்
தெரியும் வார்குழை சுடர விந்திர
திருவி லன்னதார் திளைப்பத் தேங்குழ
லரிபெய் கண்ணியர்க் கநங்க னாயினான்.

   (இ - ள்.) உருவம் ஆர்ந்தன - செந்நிறம் பொருந்தியனவாகிய; உரோமப் பட்டு உடுத்து - எலிமயிர் முதலியவற்றாற் செய்த பட்டை உடையாக உடுத்து; எரியும் வார்குழை சுடர - ஒளிசெயும் குழை கதிர்வீச; இந்திர திருவில் அன்ன தார் திளைப்ப - வானவில் போலத் தார் மார்பில் பயில; தேன் குழல் அரிபெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயினான் - தேனையுடைய குழலையும் செவ்வரி பொருந்திய கண்களையும் உடைய மகளிர்க்கு அநங்கனாயினன்.

   (வி - ம்.) செயவென் எச்சங்கள் 'ஆன் வந்தியையும் வினை நிலையான்' (தொல். வினை. 35) முடிந்தன. இவளை யொழிந்தார்க்கு அரியனாய் வருத்துதலின், அநங்கன் என்றார்.

( 48 )