பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1373 

2433 நான்றபொன் மணிமாலை நகுகதிர்ப் பவளத்தூ
ணூன்றின வொளிமுத்த மண்டபத் தொளிர்திங்கள்
கான்றன கதிர்காய்த்தும் வட்டணைக் கதிர்முத்த
மீன்றபொன் விதானத்தின் னீழலுய்த் திரீஇயினரே.

   (இ - ள்.) பொன் மணிமாலை நான்ற - பொன் மாலையும் மணி மாலையும் தொங்கவிடப்பட்ட; நகுகதிர்ப் பவளத்தூண் ஊன்றின - விளங்கும் ஒளியையுடைய பவளத்தூண் நாட்டப்பட்ட; ஒளிமுத்த மண்டபத்து - ஒளி பொருந்திய முத்து மண்டபத்தே; ஒளிர் திங்கள் கான்றன கதிர் காய்த்தும் வட்டணை - விளங்குத் திங்கள் உமிழ்ந்தனவாகிய கதிரைத் தான் எறிக்கும் வட்ட அணையிலே; கதிர்முத்தம் ஈன்ற பொன் விதானத்தின் நீழல் - ஒளியுறும் முத்துக்களைப் பதித்த பொன் விதானத்தின் நீழலிலே; உய்த்து இரீ இயினர் - அவளைக் கொண்டு சென்று இருத்தினர்.

   (வி - ம்.) மாலை நான்ற தூண்; பவளத்தூண் என இயைக்க ஊன்றின - ஊன்றப் பட்ட கான்றனவாகிய கதிர் என்க.

( 56 )
2434 மையணி மதயானை மத்தக வகலல்கு
னெய்யணி குழன்மாலை நிழலுமிழ் குழைமங்கை
மெய்யணி கலன்மாலை மின்னிருந் துகிலேந்திக்
கையணி குழன்மாலைக் கதிர்முலை யவர்சூழ்ந்தார்.

   (இ - ள்.) கைஅணி குழல்மாலைக் கதிர் முலையவர் - கையாலணிந்த குழலையும் மாலையையம் ஒளிரும் முலையையும் உடைய மகளிர்; மெய் அணிகலன் மாலைமின் இருந்துகில் ஏந்தி - மெய்யில் அணியும் கலன்களையும் ஒளிவீசும் துகிலையும் ஏந்தி; மைஅணி மதயானை மத்தக அகல் அல்குல் - அஞ்சனம் அணிந்த மதகளிற்றின் மத்தகம் போன்ற அகன்ற அல்குலையும்; நெய்அணி குழல் மாலைநிழல் உமிழ்குழை மங்கை - நெய்பூசிய குழலையும் மாலையையும் ஒளியுமிழுங் குழையையும் உடைய மங்கையை; சூழ்ந்தார் - சூழ்ந்தனர்.

   (வி - ம்.) கையணி : கைசெய்யப்பட்ட என்றுமாம்.

   மத்தகம் போலும் அகலல்குல் என்க. நிழல் - ஒளி. மங்கை : இலக்கணை. முலையவர் : பணிமகளிர்.

( 57 )
2435 அவ்வளை யவிராழிக் கால்பொலிந் தழகார்ந்த
மைவிளை கழுநீர்க்கண் விலாசியு மணியல்குற்
கைவளை யலங்கார மாலையுங் கமழ்கோதை
நைவள மிகுசாய னங்கையைப் புனைகின்றார்.