பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 138 

255 கோணிலை திரிந்து நாழி
  குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி
  விளைவஃகிப் பசியு நீடிப்
பூண்முலை மகளிர் பொற்பிற்
  கற்பழிந் தறங்கண் மாறி
யாணையிவ் வுலகு கேடா
  மரசு கோல் கோடி னென்றான்.

   (இ - ள்.) அரசுகோல் கோடின் - அரசன் முறைமை கெடுவானானால்; கோள்நிலை திரிந்து - கோள் நிற்கும் நிலைகுலைந்து; நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி - (இரவு) நாழிகை குறையப் பகற்பொழுது மிகுந்து; மாரிஇன்றி நீள்நிலம் விளைவுஅஃகி - மழையில்லாமற் பெருநிலமும் விளைவு குறைந்து; பசியும் நீடி - பசியும் நீட்டித்து; பொற்பின் பூண்முலை மகளிர் கற்பு அழிந்து - அழகிய பூணணிந்த முலையையுடைய பெண்களின் கற்புக்கெட்டு; அறங்கள் மாறி இவ்வுலகு கேடாம் - அறச்சாலைகளும் இன்றி இவ்வுலகுகெடும்; ஆணை என்றான்-இஃது அரசனுடைய ஆணையே ஆகும் என்றான்.

 

   (வி - ம்.) கட்டியங்காரன் கொலை குறித்ததும் அரசன் அவற்கு அரசளித்ததும் உட்கொண்டு இவ்விரண்டு கவியும் பொதுவாகக் கூறினான். எச்சங்கள், செயப்படுபொருளன.

 

   கோள் - ஞாயிறு முதலியன. நிலை என்பது நன்னிலை என்பது பட நின்றது. இச் செய்யுளின்கண் கொடுங்கோலால் விளையும் தீமை நன்கு விளக்கப்படுதல் காண்க. இதனுடன்,

 
  ”கோனிலை திரிந்திடின் கோணிலை திரியும்  
  கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்  
  மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை”. (மணி. 7 : 7-9)  

   எனவரும் மணிமேகலைப் பகுதியையும் நினைக.

( 226 )
256 தார்ப்பொலி தரும தத்தன்
  றக்கவா றுரைப்பக் குன்றிற்
கார்த்திகை விளக்கிட்ட டன்ன
  கடிகமழ் குவளைப் பைந்தார்
போர்த்தத னகல மெல்லாம்
  பொள்ளென வியர்த்துப் பொங்கி
நீர்க்கடன் மகரப் பேழ்வாய்
  மதனன்மற் றிதனைச் சொன்னான்.