பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1382 

நோய் இருளிலார் எங்ஙனம் உய்வர் - மயக்க நோயை உடைய, இருண்ட இல்வாழ்வார் எவ்வாறு பிழைப்பர்!

   (வி - ம்.) மருள்கலாதவர் - துறவியர். இருளையுடைய இல்லார், என்க. இல்லார் - இல்லறத்தோர். வண்ணம் இன்னது என மாறுக.

( 71 )
2449 அலர்ந்தவந் தாமரை யல்லிப் பாவையைப்
புலந்துகண் சிவந்தன போன்று நீர்பிரிந்
திலங்கிமின் னுமிழ்ந்துலா மேனி யேந்துபொன்
மலர்ந்ததோர் கற்பக மணிக்கொம் பாயினாள்.

   (இ - ள்.) இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி - பூண் விளங்கி ஒளிவீசி உலவும் மேனியினால்; ஏந்து பொன் மலர்ந்தது ஓர் கற்பக மணிக்கொம்பு - விளங்கிய பொன்னை மலர்ந்த ஒரு கற்பக மணிக்கொம்பு போன்றவள்; அலர்ந்த அம் தாமரை அல்லிப் பாவையைப் புலந்து - மலர்ந்த தாமரையின் அகவிதழில் இருக்கும் திருமகளைச் சினந்து நோக்கி; நீர் பிரிந்து சிவந்தன கண் போன்று ஆயினாள் - அன்பு மாறிக் கண்கள் சிவந்தன போன்றவள் ஆயினாள்.

   (வி - ம்.) திருவை நிகராகக் கூறுதற்குப் புலந்து சீறினாள் போன்றிருந்தது என்றார், கண்கள் மையெழுதுதலாற் சிவந்துநீர் சொரிதலை. இது தற்குறிப்பேற்றம். கண்ணுக்குக் குளிர்ச்சியும் அழகும் தரும் மையாகிய அஞ்சனத்தைக் கண்ணில் அகமும் புறமும் எழுதுதலால் கண் கரித்து நீர் சிந்திச் சிவந்தது.

( 72 )
2450 யிருடுணித் திடையிடை யியற்றி வெண்ணிலாச்
சுருடுணித் தொருவழித் தொகுத்த தொத்ததே.
மருடகு மல்லிகை மாலை வல்லவன்
பொருடகத் தொடுத்தன் புனைந்த பூஞ்சிகை

   (இ - ள்.) வல்லவன் பொருள் தகத் தொடுத்தன - கை வல்லான் ஒருவன் எழுத்து வடிவுபடக் கட்டினவாகிய ; மருள் தகு மல்லிகைமாலை புனைந்த பூஞ்சிகை - மயக்குறுதற்குக் காரணமான மல்லிகை மாலையைப் புனைந்த அழகிய முடி; இருள் துணித்து வெண்ணிலாச் சுருள் துணித்து இடையிடை இயற்றி - இருளையுந் துணித்து, வெண்ணிலவின் சுருளையும் துணித்து ஒன்றைவிட டொன்றாகத் தொடுத்து; ஒருவழித் தொகுத்தது ஒத்தது - ஓரிடத்திலே குவித்த தன்மையை ஒத்தது.

   (வி - ம்.) மருள் - மயக்கம். பொருள் எழுத்திற்கு ஆகுபெயர். கூந்தலுக்கு இருளும், மல்லிகைப்பூவிற்கு வெண்ணிலாவும் உவமை.

( 73 )