பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1385 

   (இ - ள்.) தூமாண் தூமக்குடம் ஆயிரமாய் - தூய்மையிற் சிறந்த நறுமணப் புகைக்குடம் ஆயிரமாய்; சுடர் பொன் தூண்தாம் ஆயிரமாய் - விளங்கு பொற்றூண்கள் ஆயிரமாய்; தகையார் மணித்தூண் ஒரு நூறாய் - தகுதி நிறைந்த மணித் தூண்கள் நூறாய்; பூமாண் தாமத் தொகையால் பொலந்த குளிர்பந்தர் - பூக்களாற் சிறப்புற்ற மாலைத் தொகுதியால் விளக்கமுற்ற குளிர்ந்த பந்தரை; வேமானியர் தம் மகளின் விரும்ப நனிசேர்ந்தாள் - தெய்வமகளைப்போல விரும்புபடி சேர்ந்தாள்.

   (வி - ம்.) 'தூமக்குடம் ஆயிரமாய்ப் பொற்றூண் ஆயிரமாய் விளங்கும் பந்தரிலே, மணித்தூண் நூறாய்த் தாமத்தாற் பொலிந்த வேள்விச்சாலை' என்பர் நச்சினார்க்கினியர்; 'தாவிரி வேள்விச்சாலை' எனப் பின்னர் 2490 ஆம் செய்யுளில் வருவது கொண்டு கூறினார்.

( 78 )
2456 தேனார் காமன் சிலையுங் கணையுந் திறைகொண்ட
வானார் மதிவாண் முகமும் மடமான் மதர்நோக்குங்
கோனார் மகடன் வடிவு நோக்கிக் குடைமன்ன
ரானார் கண்ணூ டழல்போ யமையா ரானாரே.

   (இ - ள்.) காமன் சிலையும் தேன்ஆர் கணையும் திறை கொண்ட - காம்னுடைய வில்லையும் தேன் பொருந்திய கணையையும் வென்ற; வான் ஆர் மதிவாண் முகமும் - வானிற் பொருந்திய திங்களனைய ஒளிபொருந்திய முகமும்; மடமான் மதர்நோக்கும் - மடமானை வென்ற மதர்த்த நோக்கும்; கோனார் மகள் தன் வடிவும் - அரசன் மகளாகிய அவள் வடிவும்; நோக்கி - பார்த்து; மன்னரானார் கண்ஊடு அழல்போய் - அரசரானாரெல்லோரும் கண் பொறிபோய்; அமையார் ஆனார் - அமைதி யிழந்தவரானார்.

   (வி - ம்.) காமன் வில்லையும் தேனார் கணையையும் வென்ற புருவமுங் கண்ணும் முகத்திற்கு அடை.

( 79 )

வேறு

2457 வண்டலர் கோதை வாட்கண்
  வனமுலை வளர்த்த தாயர்
கண்டுயி ருண்ணுங் கூற்றங்
  கயிறுரீஇக் காட்டி யிட்டா
ருண்டுயிர் சிலர்கண் வாழ்கென்
  றுத்தரா சங்கம் வைத்தார்
தெண்டிரை வேலி யெங்குந்
  தீதின தாக மாதோ.