பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1386 

   (இ - ள்.) வண்டு அலர் கோதை வளர்த்த தாயர் - வண்டுகள் நிறைந்த கோதையாளை வளர்த்த தாயர்கள்; வாள்கண் வனமுலை உயிர் உண்ணும் கூற்றம் கண்டு - இவளுடைய வாட்கண்ணும் அழகிய முலையும் உயிர் உண்ணுங் கூற்றம் என்றே கண்டிருந்தும்; தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக - தெளிந்த அலையையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகெங்குங் கெடுதியடையும்படி; கயிறு உெரீஇக் காட்டியிட்டார் - (கொல்வதற்குக்) கயிற்றை உருவிவிடுத்துக் காட்டினார்; (பிறகு, சிறிது அருள் பிறந்து); கண் சிலர் உயிர் உண்டு வாழ்க என்று - கண்கள் மட்டும் சிலர் உயிரை உண்டு வாழ்க என்று விடுத்து; உத்தரா சங்கம் வைத்தார் - (முலைகள் அதனை ஒழிக என்றெண்ணி) மேலாடையை அணிந்தார்.

   (வி - ம்.) கண்ணையும் முலையையும் கூற்றமென்றே கண்டிருந்தும் என்க. காட்டியிட்டார்; ஒருசொல். உத்தராசங்கம் - மேலாடை. ”உத்தராசங்கமிட் டொளிக்குங் கூற்றமே” என்றார் கம்பநாடரும் (எழுச்சிப் - 17.)

( 80 )
2458 கண்ணினா லின்று கண்டாங்
  கூற்றினைக் காமர் செவ்வா
யொண்ணுத லுருவக் கோலத்
  தொருபிடி நுசுப்பிற் றீஞ்சொல்
வண்ணித்த லாவ தில்லா
  வருமுலை மதர்வை நோக்கிற்
பெண்ணுடைப் பேதை நீர்மைப்
  பெருந்தடங் கண்ணிற் றம்மா.

   (இ - ள்.) இன்று கூற்றினைக் கண்ணினால் கண்டாம் - இன்று கூற்றத்தைக் கண்ணாலே பார்த்தோம்; காமர் செவ்வாய் - விருப்பூட்டும் செவ்வாயையும்; ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியையும்; உருவக்கோலத்து - அழகிய ஒப்பனையையும்; ஒருபிடி நுசுப்பின் - ஒரு பிடியில் அடங்கும் இடையையும்; தீ சொல் - இனிய மொழியையும்; வண்ணித்தல் ஆவது இல்லா - புனைந்துரைக்க முடியாத; வருமுலை - வளரும் முலைகளையும்; மதர்வை நோக்கின் - களிப்புடைய பார்வையையும்; பெண் உடைப் பேதை நீர்மை - பெண்ணியல்பையுடைய பேதை நீர்மையையும்; பெருந்தடங் கண்ணிற்று - பெரிய அகன்ற கண்களையும் உடையது.

   (வி - ம்.) அம்மா : வியப்பிடைச்சொல்.

”பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு”