பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 139 

   (இ - ள்.) தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறு உரைப்ப - வாகைமாலையாற் பொலிவுற்ற தருமதத்தன் அமைச்சர்க்கும் அரசர்க்கும் தக்க நிலையைக் கூறினானாக; குன்றில் கார்த்திகை விளக்கிட்ட அன்ன கடிகமழ் குவளைப் பைந்தார் போர்த்த தன் அகலம் எல்லாம் - குன்றிலே கார்த்திகை விளக்கிட்டாற்போல மணங்கமழும் குவளைமாலை போர்த்த மார்பு முழுதும்; பொள்ளென வியர்த்துப் பொங்கி - விரைய வியர்த்துக் கொதித்து; நீர்க்கடல் மகரப் பேழ்வாய் மதனன் இதனைச் சொன்னான் - நீர்நிறைந்த கடலில் உள்ள மகரமீனின் வாய்போலும் பெரிய வாயையுடைய மதனன் இதனைக் கூறினான்.

 

   (வி - ம்.) அறிவு குன்றியவன் என்பது தோன்ற மகரப் பேழ்வாய் மதனன் என அவன் வாயை விதந்தோதினார். மேலும், ”பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்” என்னும் திருக்குறட்கு மாறாக இவன் அறிவில்லாதவன் என்பது தோன்ற அக்குறள் சொல்லையும் இதன்கண் அமைத்தனர். இச்செய்யுளான் கார்த்திகைத் திங்கள் கார்த்திகையின்கண் குன்றின்மேல் விளக்கிடும் வழக்கம் அக்காலத்தும் இருந்தமை உணர்க.

( 227 )
257 தோளினால் வலிய ராகித்
  தொக்கவர் தலைகள் பாற
வாளினாற் பேச லல்லால்
  வாயினாற் பேச றேற்றேன்
காளமே கங்கள் சொல்லிக்
  கருனையாற் குழைக்குங் கைகள்
வாளமர் நீந்தும் போழ்தின்
  வழுவழுத் தொழியு மென்றான்.

   (இ - ள்.) தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற வாளினால் பேசல் அல்லால் வாயினாற் பேசல் தேற்றேன் - தோள் வலியுடையராகிக் கூடி எதிர்த்த பகைவர்களின் தலைகள் சிதற வாளினால் வஞ்சினம் முடித்தல் அல்லது வாயினாற் பேசுதலை அறியேன்; காளமேகங்கள் சொல்லி - தாங்கள் கரிய முகில் போல இங்ஙனம் முழங்கக் கூறுதலால்; கருனையால் குழைக்கும் கைகள் வாய் அமர் நீந்தும் பேழ்தின் - பொரிக்கறியுடன் சோற்றைத் திரட்டும் கைகள் வாளேந்திப் போர்க்கடலை நீந்தும் போழ்து; வழுவழுத்து ஒழியும் என்றான்- (மிக வேர்த்து) வாள் வழுக்கித் தொலையும் என்றான்.

 

   (வி - ம்.) 'தேற்றேன்' என்பது. 'தேற்றாய் பெரும பொய்யே' (புறநா. 59) என்றாற்போல நின்றது. இக்கவி முன்னிலைப் புறமொழி

( 228 )