பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1402 

2486 உழுந்துபய றுப்பரிசி யப்பமருங் கலங்கள்
கொழுந்துபடக் கூப்பிநனி யாயிர மரக்கால்
செழுந்துபடச் செந்நெனிறைத் தந்நுண்கொடி யறுகின்
கொழுந்துகுறைத் தணிந்துகொலை வேற்கணவ ரமைத்தார்.

   (இ - ள்.) உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அருங்கலங்கள் கொழுந்து படக் கூப்பி - உழுந்து முதலாகக் கூறப் பட்டவற்றைக் கொழுந்துபடக் கூப்பி; நனி ஆயிரம் மரக்கால் செழுந்துபடச் செந்நெல் நிறைத்து - நன்றாக, ஆயிரம் மரக்காலிலே வளமைப்படச் செந்நெல்லை நிறைத்து. அம் நுண்கொடி அறுகின் கொழுந்து குறைத்து அணிந்து - (அவற்றிலே) அழகிய நுண்ணிய கொடி அறுகம் புல்லின் கொழுந்தைக் கிள்ளி அணிந்து; கொலை வேல் கணவர் அமைத்தார் - கொலை புரியும் வேற்கண் மங்கையர் இவ்வாறு அமைத்தனர்.

   (வி - ம்.) செழுந்து : உரிச்சொல் ஈறு திரிந்தது.

   இச் செய்யுளோடு ”கொழுங்களி உழுந்தும் செழுங்கதிர்ச் செந்நெலும், உப்பும் அரிசியும், கப்புரப் பளிதமொடு, ஐவகை வாசமும் கை புனைந்தியற்றிய, முக்கூட்டமிர்தும் அக்கூட்டமைத்து” எனவரும் பெருங்கதைப் பகுதி (2-4 : 88-91) ஒப்புநோக்கற்பாலது.

( 109 )
2487 செங்கய லிரட்டைதிரு வார்சுடர்க ணாடி
பொங்குகொடி வார்முரசந் தோட்டிபுணர் கும்ப
மங்கலங்க ளெட்டுமிவை மணியிற்புனைந் தேந்தி
யங்கயற்க ணரிவையர்க டென்கிழக்கி னின்றார்.

   (இ - ள்.) அம்கயற் கண் அரிவையர்கள் மணியின் புனைந்து - அழகிய கயற்கண் மங்கையர்கள் தம்மை மணியாலே புனைந்து கொண்டு; செங்கயல் இரட்டை - சிவந்த இணைக்கயல்களும்; திருவார் - சாமரையும்; சுடர் - விளக்கும்; கணாடி - கண்ணாடியும்; பொங்கு கொடி - கிளருங்கொடியும்; வார் முரசம் - வாரால் இறுகிய முரசமும்; தோட்டி - அங்குசமும்; புணர் கும்பம் - இரட்டை (நீர் நிறை) குடமும்; மங்கலங்கள் இவை எட்டும் - மங்கலப் பொருள்களாகிய இவை எட்டையும்; ஏந்தித் தென் கிழக்கில் நின்றார் - சுமந்து தென் கிழக்கில் நின்றனர்.

   (வி - ம்.) திருவாரென்றது சாமரை அடியை. இனி, கும்பத்தோடு புணர்ந்த மங்கலங்கள் எட்டுமெனவே சாமரை கூறிற்றென்றுமாம்.

( 110 )
2488 வெள்ளுருவ மாலைவட கீழிருவர் மின்போ
லொள்ளுருவ வாளுருவி நின்றனர்தென் மேல்பா
லுள்ளுருக நோக்கியுய ருழுத்தகலு மேந்திக்
கள்ளுருவ மாலையவர் கைதொழுது நின்றார்.