பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1410 

   (இ - ள்.) அன்னப் பெடை நடுக்கி - அன்னப் பெடையை அஞ்சுவித்து; அசைந்து தேற்றா நடையாளும் - இளைத்து (நடக்கின்றாள் என்று) பிறரைத் தெளிவியாத நடையை உடைய இலக்கணையும்; மன்னர்குடை நடுக்கும் மாலை வெள்வேல் மறவோனும் - பகை மன்னரின் குடையை அச்சுறுத்தும், மாலையணிந்த வேலையுடைய சீவகனும்; மின்னும் மணிக்குடத்தின் வேந்தர் ஏந்த - ஒளிரும் மணிக்குடத்திலே வேந்தர்கள் நீரை ஏந்த; புனல் ஆடி - நீராடி; பொன் அம் கடிமலரும் துகிலும் சாந்தும் புனைந்தார் - பொன்னணிகளையும் மணமலரையும் துகிலையம் சாந்தையும் அணிந்தார்கள்.

   (வி - ம்.) அசைந்து - இளைத்து. பிறரைத் தேற்றாநடை என்க. மன்னர் - பகைமன்னர். நடுக்கும் - நடுங்கச் செய்யும். மறவோன் - சீவகன். வேந்தர் குடத்தின் ஏந்த அடி என்க.

( 124 )
2502 எஞ்சுற்ற மென்றிரங்கா தாக
  மெல்லாங் கவர்ந்திருந்து
தஞ்சுற்றம் வேண்டாத முலைக்கீழ்
  வாழ்வு தளர்கின்ற
நஞ்சுற்ற வேனெடுங்கட் பாவை
  நல்கூர் சிறுநுசுப்பிற்
கஞ்சுற் றுழிப்புலர்ந்தாங் கணிந்தா
  ரம்ம மணிவடமே.

   (இ - ள்.) எம் சுற்றம் என்று இரங்காது - எம் உறவு என்று அருளாமல்; ஆகம் எல்லாம் கவர்ந்திருந்து - அந்த மார்பின் இடத்தையெல்லாம் கைக்கொண்டு அடிபரந்து; தம் சுற்றம் வேண்டாத - தம் உறவுட்பட விரும்பாத கொடியனவாகிய; முலைக்கீழ் வாழ்வு தளர்கின்ற - முலைகளின் கீழேயிருந்து குடிவாழ்க்கை தளர்கின்ற; நஞ்சு உற்ற வேல் நெடுங்கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு - நஞ்சுடைய வேலனைய நீண்ட கண்களையுடைய இலக்கணையின் வறிய சிறிய இடைக்கு; அஞ்சுற்றுழிப் புலர்ந்தாங்கு - அஞ்சின இடத்தே விடிந்தாற் போல; மணிவடம் அணியிந்தார் - மணிவடத்தை இடையைச் சுற்றி அணிந்தார்.

   (வி - ம்.) அம்ம : இத் தீங்கினைக் கேட்பீராக!

   இடம் தந்து தோற்றுவித்தலின் மார்பை முலைகட்குச் சுற்றம் என்றார். அஞ்சுதலாவது சுற்றத்தையே வருத்துங் கொடுங்கோன்மை மிக்க முலைகளின் கீழ்க் குடியிருந்தால் இறந்துபடுவோமென்று அஞ்சுதல். மணிவடத்தின் ஒளி இருளை ஓட்டுகலின் அதனை அணிந்து விடிந்தாற்போல இருந்தது. இடையைச் சுற்றி அணிதலின் தளையிட்டாராயிற்று. பாவையது நுசுப்பு, நல்கூர் நுசுப்பு என்க.

( 125 )