(வி - ம்.) பொற்ற : பொற்பென்னும் உரிச்சொல் திரிந்தது. பொழிதல் ஈண்டு முத்துக்களின் வினை. ஊடல் முழுதும் தீராமையின் வெம்பனியாயிற்று. உற்று - ஊடல் தீர்தலுற எனத் திரிக்க. 'பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் - என்றபடி சேர்தலும் உண்டு' (கனி. 89) என்றாராகலின், அடியில் வணங்கிய பின்னும் ஊடல் தீராது அழுதாள் என்றல் கற்பிற்குப் பொருந்தாது. 'இளிவே இழவே' (தொல். மெய்ப். 5) என்னும் சூத்திரத்தில் அழுகையாவது அவலமும் கருணையும் ஆதலின், 'கயமலருண் கண்ணாய்' என்னும் (37) கலியில், 'தானுற்றநோயுரைக் கல்லான் பெயரு மன்' ..... 'சேயேன்மன் யானும் துயருழப்பென்' என்ற வழிப் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலந் தோன்றினாற் போல, இதனையும் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த கருணையென்று கொள்க வணங்குதல் : அவற்கு இளிவரவு அதனாற் கருணை பிறந்தது. அழுகை ஈண்டுக் கருணை. இதனால் ஊடல் தீரக் கருதினாளாம்.
|
( 131 ) |