பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1416 

 

   (இ - ள்.) பேதாய்! - பேதையே!; பெற்ற கூழுண்டு நாளும் மிணி உழந்திருத்தும் - யாம் பெற்ற உணவை உண்டு எப்போதும் கூட்டிலே பிணிப்புண்டு வருந்தியிருப்போம்; முற்றிமை சொல்லின் - (இத் தன்மையுடைய நாம்) அறிவுடைமை கூறின்; பொன் தொடி நங்கை மூன்று நான் அடிசில் காட்டாள் - பொன் வனையலணிந்தவளாகிய நங்கை மூன்று நாள்வரை உணவைக் கண்ணிலுங் காட்டாள்; தத்தையீரே! நும் வாயைப் பொத்தும் - (ஆதலால்) கிளியீரே! நும் வாயை மூடும்; என்று பூவையார் தம் காரணக் கிளவி தம்மால் கற்பித்தார் - என்று பூவையார் தமக்கு மேல் வருங் காரியத்திற்குக் காரணமாகிய மொழிகளாலே கற்பித்தார்.

   (வி - ம்.) 'தந்தையீரே!' என்பது இகழ்ச்சியாலும், 'பூவையார்' என்பது சிறப்பினாலும் திணை வழுவமைதியாயின.

( 134 )
2512 பழியொடு மிடைந்த தேனுஞ்
  சீறடி பரவி னாற்கு
வழிபடு தெய்வ மாகி
  வரங்கொடுத் தருளல் வேண்டு
மொழிபடைக் களிறு போல
  வுயங்கவு முருகி நோக்காப்
பிழிசடு கோதை போலாம்
  பெண்டிரைக் கெடப்பி றந்தாள்.

   (இ - ள்.) ஒழிபடைக் களிறுபோல உயங்கவும் - வேல் தைத்து - நின்ற களிறுபோலக் கணவன் வருந்தவும்; உருகி நோக்கா - மனமுருகிப் பாராத; பிழிபடு கோதை போலாம் பெண்டிர் கெடப் பிறந்தாள் - உபாயத்தால் தேனை வாங்கிக் கொள்ளப்படும் கோதை போலேயாம் பரத்தையர் பொல்லாராகும் படி நற்குடியிலே பிறந்தவள்; பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு - தன் கணவன் செயல் பழியுடன் கூடியதாயினும் அது தீர அடி பரவினவனுக்கு; வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்தருளல் வேண்டும் - வழிபடு தெய்வம்போல இருந்து வரத்தைக் கொடுத்தருளுதல் வேண்டும்.

   (வி - ம்.) நற்குணமுடைய கிளி, பூவையின் மொழியைக் கேளாமல் இவ்வாறு கூறியது. இது அடுத்த செய்யுளுடன் தொடரும்.