| 
 நெருப்பு என்று அஞ்சி; சிறை அன்னம் நிலத்தைச் சேரா - சிறகுகளையுடைய அன்னம் நிலத்தைச் சேராவாயின; இந்திர கோபமாம் என்று - அவற்றை இந்திர கோபம் என்று எண்ணி; இளமயில் குனிந்து குத்திச் சிந்தையில் தேம்ப - இள மயில்கள் குனிந்து குத்தி, அவை அன்மையின், நெஞ்சாலே வருந்த; திருமணி தாமே நக்க - அழகிய மணிகள் அதற்குத் தாம் நகைத்தாற் போன்று ஒளி வீசின. 
 | 
| 
    (வி - ம்.) இச் செய்யுள் முதலாக வேட்கையிலாப் பருவத்தாரும். பிறக்கின்ற பருவத்தாரும், பிறந்த பருவத்தாரும் என மூன்று கூறாக்கிக் கூறுகின்றார். 'பேதை அல்லை மேதையங் குறுமகள் - பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென' (அகநா. 7) என்றலின், பேதை வேட்கை பிறவாப் பருவத்தாதலும், பெதும்பை வேட்கை பிறக்கின்ற பருவத்தாதலும் பெற்றாம். இவை ஒழிந்த மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெயர்கள் வேட்கை பிறக்கின்ற பருவத்துப் பெயர்களாம். அன்றி, அவையும் பல பருவத்தை உணர்த்தும் பெயர்களெனின் : அது முதனூல்களிற் கூறாமையானும், சான்றோர் வேறுபாடு கூறாமல் மகளிர்க்குப் பொதுப் பெயராகச் செய்யுள் செய்தலானும் தேவர்க்கும் அது கருத்தன்றாம். இனி, உலாவிற்கு அங்கமாகப் புதிய நூல்களிற் கூறிய விதி இதற்காகாமையுணர்க. 
 |