பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1427 

2530 தன்னெறி வளரக் காமன்
  றான்முலை யிரண்டு மாகி
முன்னரே வளர்கின் றாற்போன்
  முகிழ்முலை முத்த மேந்திப்
பொன்னெறி மணியிற் பொங்கிக்
  குழல்புறம் புடைப்ப வோடிப்
பின்னிறீஇ வைத்த போலப்
  பெதும்பையர் விதும்பி நின்றார்.

   (இ - ள்.) தன் நெறி வளர - தன் கொள்கை உலகிலே வளர்தற்கு; காமன் தான் முலை இரண்டும் ஆகி - காமன் தான் இரண்டு முலைகளும் ஆகி; முன்னரே வளர்கின்றாற் போல் - முதலிலிருந்தே வளர்வதைப் போல; முகிழ் முலை முத்தம் ஏந்தி - அரும்பிய முலைகளிலே முத்துக்களை அணிந்து; பொன் எறி மணியின் பொங்கி - பொன்னிலே வந்து தாக்கும் நீலமணி போலக் கிளர்ந்து; குழல் புறம் புடைப்ப ஓடி - குழல் சென்று முதுகிலே மோதும்படி ஓடி; பின் நிறீஇ வைத்த போல - பின்னும் தலை நிறுத்தி வைத்தாற் போல; பெதும்பையர் விதும்பி நின்றார் - பெதும்பையர் மனம் அசைந்து நின்றனர்.

   (வி - ம்.) போல் முகிழ்ந்த எனக் கூட்டுக. எறிதல் : 'திரை எறிதல்' போல நின்றது. 'பின்னும் தலை நிறுத்தி வைத்தாற் போல' என்றது சேர நிறுத்தினாற் போல நின்றமை கூறிற்று. இனிக் காமன்றான் தன் நெறி வளர முலையிரண்டும் தனக்குண்டாய் வளர்கின்றாற்போல நின்றார் என்றும் உரைப்ப.

   நச்சினார்க்கினியர், 'முன்னரே' என்பதைப் பின்னுக்குக் கொணர்ந்து, 'முன்னரே நின்றார்' என்றியைப்பர். பெதும்பைப் பருவம் மங்கைப் பருவத்திற்கு முற்பட்டதாய் வேட்கை பிறக்கும் பருவமாய் நின்றதாதலின், காமனும் வேட்கை பிறப்பிக்க முன்னரே வளர்கின்றான் என்பது பொருத்தமாக இருக்கவும், பின்னுக்குக் கொண்டு வந்து கூட்டுவதன் காரணம் விளங்கவில்லை.

( 153 )
2531 அணிநிலா வீசு மாலை
  யரங்குபுல் லென்னப் போகித்
துணிநிலா வீசு மாலைப்
  பிறைநுதற் றோழி சோ்ந்து
மணிநிலா வீசு மாலை
  மங்கையர் மயங்கி நின்றார்
பணிநிலா வீசும் பைம்பொற்
  கொடிமணி மலர்ந்த தொத்தார்.