பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1434 

   (இ - ள்.) முனித்தலைக் கண்ணி நெற்றிச் சிறார் முலை முழாலின் - முனிவர் தலைபோலும், தலையையும் மலர்க்கண்ணி முடிந்த நெற்றியையும் உடைய சிறுவர், முலையிலே சேர்தலால்; புனிற்றுப் பால் பில்கித் தேமா வடு இறுத்தாங்குப் பிலிற்றிப் பாய - ஈன்ற அணிப்பாற் பாலூறித் தேமாவின் வடுவை இறுத்தாற்போலக் கொப்புளித்துப் பாய; கண் அரக்கி நுனித்து நோக்காது ஒசிந்து நின்றார் - கண்களை அமுக்கி அரசனைக் கூர்ந்து நோக்காமல் நாணி நின்றவர்கள்; கனிப் பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு ஒத்தார் - கனியாகிய சுமைமிகுந்து நின்ற கற்பக மலர்க்கொம்பைப் போன்றனர்.

   (வி - ம்.) கனியாகிய சுமை மிக்கதொரு கற்பகமெனவே புதல்வனாகிய பயனைக் கொடுத்தாரென்பது பெறப்பட்டது. கற்பு மிகுதியால் தம் கணவர்க்குச் செல்வம் எல்லாந் தருவாரெனற்குக் கற்பகங் கூறினார். 'முனித்தலைப் புதல்வர்' (புறநா. 250).

( 164 )
2542 அவிரிழை சுடர முல்லை யலங்கலங் கூந்தல் சோரத்
தவிர்வெய்ய காமந் தாங்கித் தடமுலைக் கால்கள் சாய
விவர்தரு பிறவி யெல்லா மின்னமா கென்று நின்றார்
சுவர்செய்தாங் கெழுதப் பட்ட துகிலிகைப் பாவை யொத்தார்.

   (இ - ள்.) அவிர் இழை சுடர - விளங்கும் அணிகலன் ஒளிர; முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர - முல்லைக் கண்ணி அணிந்த கூந்தல் சோர; தவிர வெய்ய காமம் தாங்கித் தட முலைக் கால்கள் சாய - நீங்கிய கொடிய காமத்தையுடையராய்ப் பெரிய முலைக்கால்கள் சாய்வுற; இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார் - இனி மேவும் பிறவிகளிலெல்லாம் இத்தன்மையேம் ஆகுக என்று கூறி நின்றவர்; சுவர் செய்து ஆங்கு துகிலிகை எழுதப்பட்ட பாவை ஒத்தார் - சுவரமைத்து அதிலே துகிலிகையால் வரையப்பட்ட பாவையைப் போன்றனர்.

   (வி - ம்.) முல்லை கற்பிற்குச் சூடினார். 'தவிர் வெய்ய காமம்' என்பது காமம் இன்மையைக் குறிக்கின்றது. இன்னமாக; பிறக்கும் பிறவி எல்லாம் நீ காக்கின்ற உலகிலே இங்ஙனம் இனிது உறைவோமாக. பாவை; கொண்டநிலை தான் கெடுமளவும் குலையாத தன்மை போல. அவர் தாம் கொண்ட கற்பும் குலையாதிருத்தலின், 'பாவை' என்றார்.

( 165 )
2543 வேரிநா றலங்கன் மாலை மின்னிழை மயங்கி யெங்கும்
பூரித்துப் புதவந் தோறுங் குவளையு மரையும் பூத்துப்
பாரித்துப் பைம்பொ னாகருலகிவண் வீழ்ந்த தேபோன்
மாரிமா மயில னாரு மைந்தரு மயங்கி னாரே.

   (இ - ள்.) பைம்பொன் நாகர் உலகு பாரித்து இவண் வீழ்ந்ததேபோல் - பொன்னுலகத்தவரும் நாகருலகத்தவரும்