பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 146 

கண்ணி கொங்கு அலர்கோதை மாழ்கி - செவ்வரி பரந்த கயற்கண்ணாள் மணம்விரியும் மலர்மாலைபோல வருந்தி; குழைமுகம் புடைத்து வீழ்ந்து - குழையணிந்த முகத்தி லறைந்துகொண்டு வீழ்ந்து; வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள் - (வயிற்றில் இருக்கும்) விருப்பம் மிகும் திருமகனுக்கு வருத்தம் உண்டாக்கினாள் (வயிற்றில் அடித்துக்கொண்டாள்).

 

   (வி - ம்.) 'வேண்டும்' என்பது ஒரு வியங்கோள்; 'ஓஓதல் வேண்டும்' (குறள், 658) என்றாற்போல. நன்பொருள்: பிள்ளை. எல்லாம் என்றான் பிள்ளையார் ஆக்கங் கருதி (விசயையின்) உயிர் நிற்றற்கு, தெளிவுபற்றி, 'விளைந்த' என இறந்த காலத்தாற் கூறினான்.

 

   நன்பொருள் - மகவு.

 
  ”தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்  

   தந்தம் வினையான் வரும்” (குறள். 63)

( 238 )
268 மல்லலைத் தெழுந்து வீங்கி
  மலைதிரண் டனைய தோளா
னல்லலுற் றழுங்கி வீழ்ந்த
  வமிர்தமன் னாளை யெய்திப்
புல்லிக்கொண் டவல நீக்கிப்
  பொம்மல்வெம் முலையி னாட்குச்
சொல்லுவா னிவைகள் சொன்னான்
  சூழ்கழற் காலி னானே.

   (இ - ள்.) மல்அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டனைய தோளான் - மல்தொழிலை வருத்தி வளர்ந்து பருத்து மலைதிரண்டாற் போன்ற தோள்களையும்; கழல்சூழ் காலினான் - கழல் சூழ்ந்த கால்களையும் உடைய சச்சந்தன்; அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்தி - துன்பம் உற்றுக் கெட்டு வீழ்ந்த அமிர்தம்போன்ற விசயையை நெருங்கி; புல்லிக்கொண்டு அவலம் நீக்கி - தழுவிக்கொண்டு சோர்வைப் போக்கி; பொம்மல் வெம்முலையினாட்குச் சொல்லுவான் இவைகள் சொன்னான் - பருத்த விருப்பமூட்டும் முலையினாட்கு ஆறுதல் கூறத் தொடங்கிப் பிரிவை யுணர்த்தும் இம்மொழிகளைக் கூறினான்.

 

   (வி - ம்.) அமுதயின்றார்க்கு நாள் 1.உலந்தால் அது வேறுபாடு தோற்றுவிக்குமாறுபோல இவற்கும் வேறுபாடு தோற்றுவித்தலின், 'அமிர்தம் அன்னாள்' என்றார்.

 

   இவை இருந்தும் பயன் என்கொல் என்றிரங்குவார் ”மல்லலைத் தெழுந்து வீங்கி மலைதிரண் டனைய தோளான்” என்றார்.

( 239 )

1. உலந்தால் - கெட்டால்.