(இ - ள்.) நான் மருப்பின் மதயானை - நான்கு மருப்புக்களையுடைய ஜராவதத்தின் மேலே; நறிய பைந்தாமரை மடந்தையை - (உள்ள பொய்கையிலே) மணமுடைய பைந்தாமரையில் உள்ள திருமகளை; தேன் மதர்ப்பத் திளைத்தாங்கு - வண்டுகள் மகிழத் திளைத்தாற்போல; அவள் திரு இன் சாயல் நலம் கவர்ந்தபின் - அவளுடைய அழகிய இனிய சாயலாகிய நலத்தை நுகர்ந்த பிறகு; வானகத்தும் நிலத்தும் இல்லா வண்ணம் மிக்க மணிப்பூணினான் - வானிலும் நிலத்திலும் இல்லாத, அழகு மிக்க மணிக்கலத்தான்; ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ - (தம்மை நோக்கினார்) உடம்பு மதர்த்தற்குக் காரணமான, ஒளியையுடைய வேல்போலுங் கண்ணார் புகழ; இவ்வாறு ஒழுகும் - மேலும் இவ்வாறு நடப்பானாயினான்.
|
(வி - ம்.) நச்சினார்க்கினியர், 'நான் மருப்பின் மதயானையென்பது, யானை யிரண்டினை யுணர்த்திற்று' என்று விளக்கங் கூறி, 'இரண்டானை பக்கத்தே நின்று நீரைச் சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகள்' என்று பொருள் கூறுவர்: 'வரிநுதல் எழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப் - புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் - திருநயந்திருந்தன்ன' (கலி. 44) என்றார் பிறரும் என மேற்கோள் காட்டுவர். அவர், மேலும், 'இனி, ஐராவதத்தின் மேலே பொய்கையாயதில் தாமரையிலே யிருக்கும் திரு என்பாருமுளர்' என்பார்,
|