பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1467 

13. முத்தி இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   விசயை தனக்குதவியாகத் தன்னோடு வந்த தவமகளிர்க்குக் கைம்மாறாகத் தன் பூசனைப் பயனையெல்லாம் ஈந்தனள். ஈமப் புறங்காட்டில் சண்பகமாலை என்னும் தோழியுருக்கொண்டு வந்து தனக்கப் பேருதவி செய்த தெய்வத்திற்குப் அப்புறங்காட்டில் கோயிலெடுத்து விழாக்கொண்டாடச் செய்தனள். சீவகன் பிறந்த இடத்தை அறக்கோட்டமாக்கினள். சுநந்தை விசயையைக் கண்டு தொழுதனள். அவளைப் ”பீடார் பெருஞ் சிறுவற் பயந்தீர் வம்மின்” என்று விசயை மகிழ்ந்து வரவேற்றாள். தேவியரெண்மரும் முதலிய தேயிரெண்மரும் விசயை திருவடியில் வீழ்ந்து வணங்கினர். அவரை விசையை மனமுவந்து வாழ்த்தினள்.

   பின்னர் விசயை சீவகனைக் கண்டு வாழ்த்தினள். ”சச்சந்தன் கழிகாமத்தாற் கேடுற்றான்; நீ அவன் போலன்றித் தீநெறி கடிந்து நன்னெறிச் சென்றுயர்வாயாக' என்று அறவுரை கூறினள். யான் இனித் துறவின்பாற் செல்வேன் என்று தன் கருத்தைச் சீவகனுக் குணர்த்தினள். தாயின் பிரிவைக் கேட்கப் பொறாதவனாய்ச் சீவகன் மயங்கி வீழ்ந்தனன். விசயை அவனைத் தெளிவித்து அறவுரை பற்பல பகர்ந்து தேற்றினள். செல்வமும் இளமையும் யாக்கையும் நிலையுதலில்லதான ஆதலால் இவற்றின் மகிழாமல் நாளும் நல்லறமே நாடிச் செய்தல் வேண்டும் என்று நவின்றாள். இவற்றைக் கேட்ட சுநந்தை தானும் துறவறஞ் சேர்தற்குத் துணிந்தனள். அதுகண்ட சீவகனும் தேவிமாரும் கலங்கி அழுதனர். சுநந்தையோடு விசயை ஆயிரம் மகளிர் புடைசூழப் பம்மை கோயிலை எய்தினள். பம்மையடிகளார் துறவு நெறியருள யாவரும் துறவுபூண்டனர். அணிகலன்களை அகற்றினர் ;கூந்தல் உகுத்தனர் வெண்டுகிலுடுத்தனர். மெய்ந்நூற் பொருளை யுணர்ந்தனர். புகழுகுரைக்கு மகிழாராய் இகழுரைக்கு இரங்காராய் எப்பொழுதும் ஒரு தன்மையராயினர். சீவகன் சென்று அவரடி வீழ்ந்து சின்னாளேனும் இவணிருத்தல் வேண்டும் என்று வேண்டியான்.

   பின்னர் அமைச்சர் சீவகனை இன்பத்திலே மயங்கும்படி செய்யமுயன்றனர். நீராட்டி லீடுபடச் செய்தனர். பருவத்திற்கேற்ற இன்ப நுகர்ச்சியில் ஈடுபடுத்தினர். இந்தக் காலத்தே கோப்பெருந்தேவியர் வயிறு வாய்த்து ஆண்மக்களைப் பயந்தனர்.