பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1468 

   அம்மக்கட்கு நிரலே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் எனப் பெயரிடப்பட்டது. அம் மக்களெல்லாம் கலைபயின்று சிறந்தனர்; சீவகன் முப்பதாண்டகவை யுடையனாயினன்.

   இங்ஙனமிருக்க ஒருநாள் சீவகசாமி பொழிலின்ப நுகரச் சென்றான். தேவியருமுடன் சென்றனர். அவர்களுடன் மன்னவன் விளையாடி ஆங்கொரு வருக்கை நீழலிற் சென்று தமியனாயிருந்திளைப்பாறினான். அம் மரத்தின் மிசையிருந்த மந்தியொன்று தன் கடுவனொடு ஊடிற்று. அக்கடுவன் அதனை இனியன பலகூறி ஊடலுணர்த்தியது. அளிந்த பலாப்பழம் ஒன்றனைப் பறித்துக் கொணர்ந்து மந்தி அக் கடுவனுக்குக் கொடுத்தது. அப்பொழுது ஆண்டுவந்த சிலதன் ஒருவன் அவற்றைக் கடிந்து ஓட்டிவிட்டு அப்பலாப்பழத்தைக் கவர்ந்துண்டனன். இந் நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் உலகியலை வெறுத்தான். ஆ! ஆ!! கைப்பழமிழந்த மந்தியை ஒத்தான் கட்டியங்காரன் ; அவனை அலைத்து அரசினைக் கைப்பற்றிய யான் இச் சிலதனையே ஒத்தனன். மெலியோரை வலியோர் நலிந்துண்டலே இவ்வுலகியலாயிற்று. இவ்வுலகின்கட் பிறத்தல் இளிவரவுடைத்து. யான் இனி நோற்றுத் துறக்கம் புகுதலே சால்புடைத்து - ஆகூழான் எய்திய மனைவியரும் மக்களும் போகூழ் தோன்றிற் பிரிதல் ஒருதலை. இனி நல்லறம்பற்றித் துறந்து போகுவல் என்று துணிந்தனன்.

   சாரணர்பாற் சென்ற தனக்கு அறங்கூற வேண்டினன். ஒரு சாரணர், சீவகனுக்குயாக்கைய தருமையும் அதன் நிலையாமையும் அதனாலுறும் துன்பமும் விளங்க விரித்துரைத்தனர். நால்வேறு கதிகளின் இயல்புகூறத் தொடங்கி முன்னர்நரக கதித்துன்பமிவையென நவின்றார். பின்னர் விலங்குப் பிறப்பிலுறும் இன்னல்களை விரித்துரைத்தனர். பின்னர் மக்கட்பிறப்பில் எய்தும் துன்பமெல்லாம் விளக்கினர். பின்னர்த் தேவகதியினியல்பிற்றெனத் தெரித்தோதினர். சீலம் தானம் என்பவற்றை விளக்கினர். வீட்டியல்பிற்றென விளக்கினார்.

   சாரணர் மெய்ம்மொழி கேட்ட சீவகன் தனது பழம்பிறப்பு வரலாற்றினை உணர்த்தும்படி வேண்டினன். சாரணரும் சீவகன் பழம்பிறப்பில் அசோதரனாகத் தோன்றினமையும், மனைவியர் பொருட்டு அன்னப் பார்ப்பினைப் பிடித்துக் கூட்டில் அடைத்து வைத்தமையும் அப்பிறப்பிற் றவஞ் செய்து இந்திரனாயதும், பின்னர் இப்பிறப்புற்றதும் அன்னப் பார்ப்பைச் சிறையிட்டமை யால் இப் பிறப்பிற் பற்றலராற் பற்றப்பட்டமையும் விளக்கிச் சென்றனர்.