பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1480 

 

   (இ - ள்.) நாம் பிறந்து பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது - நாம் உலகிற் பிறந்து பெற்ற வாழ்நாட்கள் இவ்வளவு என்பதை; ஒன்றும் அறிந்திலம் - சிறிதும் அறியோம்; வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம் - வாழ்வோம் என்கிற ஆசையிலே முழுகுகின்றோம்; கூற்றுக் கறந்து உண்ணும் ஞான்று - கூற்றுவன் வாழ்நாளைக் கறந்து உயிரை உண்ணும் போது; கண் புதைத்து இரங்கின் அல்லால் - (அஞ்சிக்) கண்ணைப்பொத்தி அழுவதை அன்றி; இறந்த நாள் யாவர் மீட்பார் - கழித்த நாட்களைத் திரும்ப யாவர் பெறுவார்?;   இற்று எனப் பெயர்க்கல் ஆமோ? - இத் தன்மைத் தென்று நம்மால் மீட்க முடியாது.

   (வி - ம்.) இரங்குதல் : இப்பிறவித் துன்பத்தை நீக்குதற்குத் தவம் புரிந்திலமே என வருந்துதல். கழிந்த நாட்களை மீட்க விரும்புவது தவஞ்செய்தற்கு.

( 18 )
2617 சுமைத்தயிர் வேய்ந்த சோற்றிற்
  றுய்த்தினி தாக நம்மை
யமைத்தநா ளென்னு நாகம்
  விழுங்கப்பட்ட டன்ன தங்க
ணிமைத்தகண் விழித்த லின்றி
  யிறந்துபா டெய்து கின்றா
முமைத்துழிச் சொறியப் பெற்றா
  மூதியம் பெரிதும் பெற்றாம்.

   (இ - ள்.) சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின் - கட்டித் தயிரால் ஆக்கப்பெற்ற சோற்றை இனிதாக உண்பதுபோல; அமைத்த நாள் என்னும் நாகம் - (நம் வாழ்விற்கு) வைத்த நாட்கள் என்னும் பாம்பு; இனிதாக நம்மைத் துய்த்து விழுங்கப் பட்டு - இனிமையாக நம்மைச் சிறிது சிறிதாக உண்டு விழுங்கப்பட்டு; அங்கண் அன்னது இமைத்த கண் விழித்தல் இன்றி இறந்து பாடு எய்துகின்றாம் - அவ்விடத்தே அவ்வாழ்நாளை, இமைத்த கண் விழித்தற்கும் இயலாத அளவிலே கடந்து சாவெய்துகின்றோம்; உமைத்துழிச் சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம் - (எனினும்) தினவுற்றபோதே சொறியப் பெற்றோம் எனினும் ஊதியம் மிகவும் பெற்றவராவோம்.