பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1487 

தழுவிய வெண்ணெய்க் குன்றுபோல; யாதும் இன்றிக் குழைந்து - மறுத்துக்கூறுஞ் சொல் சிறிதும் இன்றி உருகி; மெய்ம் மறந்து நின்றான் - தன்னை மறந்து நின்றான்.

   (வி - ம்.) கந்துக்கடன் முன்னே இறத்தலின், சுநந்தையைத் துறவு விலக்கிக் கூறுதல் அறன் அன்றென்று கருதியதால், மறுக்குஞ் சொல் யாதும் இன்றி நின்றான் என்றார். கந்துக்கடன் இறந்தமை இத் தொடர்நிலைச் செய்யுளில் தேவர் கூறிற்றிலர் தகுதியன் றென்று கருதி; இத்துறவால் உய்த்துணர வைத்தார்.

( 29 )
2628 ஓருயி ரொழித்திரண் டுடம்பு போவபோ
லாரிய னொழியவங் கௌவை மார்கடாஞ்
சீரிய துறவொடு சிவிகை யேறினார்
மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே.

   (இ - ள்.) ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவபோல் - ஓருயிரைக் கை விட்டு இரண்டுடம்பு போந்தன்மை போல; ஆரியன் அங்கு ஒழிய - சீவகன் அங்கே யிருப்ப; ஒளவைமார்கள் தாம் - தாய்மார் இருவரும்; சீரிய துறவொடு - சிறப்புடையதாகிய துறவை யுட்கொண்டு; சிவிகை ஏறினார் - சிவிகையிலே ஏறிப்போயினார்; மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்த - மழை பெய்வதைப்போல, அங்கிருந்த மங்கையரின் கண்கள் நீரை வடித்தன.

   (வி - ம்.) சீரிய துறவென்றார் சீவகன் வாழ்வை யுட்கொண்டு முன்னர் இருந்த நோன்பினுஞ் சிறப்புடைத் தென்பது கருதி.

   சீவகனுக்கு உயிரும், தாய்மாரிருவர்க்கும் இரண்டு உடம்புகளும் உவமை. ஆரியன் - மேலானவன்; சீவகன், ஒளவைமார்- தார்மார்; ஈண்டு விசயையும், சுநந்தையும். கண்கள் மாரியின் வார்ந்த என மாறுக.

( 30 )
2629 நன்மயிற் பொறியின்மேற் போயா நாளினும்
புன்மையுற் றழுகுரன் மயங்கிப் பூப்பரிந்
திந்நகர் கால்பொரு கடலி னெங்கணு
மன்னனி லாகுல மயங்கிற் றென்பவே.

   (இ - ள்.) நல் மயில் பொறியின்மேல் போய நாளினும் - அழகிய மயிற்பொறியின்மேல் விசயை சென்ற நாளாகிய, சச்சந்தன் பட்ட நாளினும்; புன்மை உற்று - வருத்தம் அடைந்து; கால் பொரு கடலின் - காற்றால் மோதப்பட்ட கடலினும்; இந் நகர் எங்கணும் - இராசமாபுரம் எங்கும்; அழுகுரல் மயங்கி - (முன்னர்) அழுகுரலாலே மயங்கி; பூப் பரிந்து - மலரை எடுத்தெறிந்து; மன்னனில் ஆகுலம் மயங்கிற்று - (பின்னர்ச்) சீவகனைப் போலச் செயலற்றுச் சோர்ந்தது.