பக்கம் எண் :

New Page 9

நாமகள் இலம்பகம் 149 

272 உரிமைமுன் போக்கி யல்லா
  லொளியுடை மன்னர் போகார்
கருமமீ தெனக்கு மூர்தி
  சமைந்தது கவல வேண்டா
புரிநரம் பிரங்குஞ் சொல்லாய்
  போவதே பொருள்மற் றென்றா
னெரிமுயங் கிலங்கு வாட்கை
  யேற்றிளஞ் சிங்க மன்னான்.

   (இ - ள்.) எரிமுயங்கு இலங்கு வாள்கை இளஞ்சிங்க ஏறு அன்னான் - எரியில் தோய்ந்து விளங்கும் வாளேந்திய கையனான, ஆணிளஞ்சிங்கம் போன்றவன்; புரிநரம்பு இரங்கும் சொல்லாய் - முறுக்கப்பெற்ற நரம்பிலெழும் பண்ணும் வருந்தும் இனிய சொல்லினாய்; ஒளிஉடை மன்னர் உரிமைமுன் போக்கி அல்லால் போகார் - புகழுறும் வேந்தர்கள் தம் உரிமை மகளிரை முன்னே போக்கியல்லது தாம் போகார்; எனக்கும் கருமம் ஈது - (ஆகவே) எனக்கும் இப்பொழுது இசைந்த காரியம் இதுவே; ஊர்தி சமைந்தது - ஆகூழானே ஓர் ஊர்தியும் அமைந்துவிட்டது; கவலவேண்டா - இனி வருந்தவேண்டா; போவதே பொருள் என்றான் - (ஆகையால்) நீ முன்னர் ஏகுவது செய்யத்தக்கது என்றான்.

 

   (வி - ம்.) பிள்ளையாற் கதி பெறுதலும் பகை வெல்வதுங் கருதி இருவர்க்கும் கருமம் என்றான். கவலுதல்: இருதலைக் கொள்ளி எறும்பு போற் கணவனையும் மகனையும் எண்ணி வருந்துதல். கவலை : இருபாற்பட்டது.

 

   எனக்கும் கருமம் ஈது என மாறுக. ஊர்தியும் சமைந்தது எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

 

   ஆகூழ் உண்மையால் ஊர்தியும் சமைந்துளது என்றவாறு. ஊர்தி என்றது மயிற்பொறியை. எனக்கும் கருமம் ஈது என்றது நின்னைப் போக்குவதே என்றவாறு. நினக்கும் போவதே கருமம் என்க.

( 243 )
273 என்புநெக் குருகி யுள்ள
  மொழுகுபு சோர யாத்த
வன்புமிக் கவலித் தாற்றா
  வாருயிர்க் கிழத்தி தன்னை
யின்பமிக் குடைய சீர்த்தி
  யிறைவன தாணை கூறித்
துன்பமில் பறவை யூர்தி
  சோ்த்தினன் துணைவி சோ்ந்தாள்.