பக்கம் எண் :

                       
முத்தி இலம்பகம் 1492 

   (இ - ள்.) பொன் மயிர் - (அவ்வாறு பறித்த) அழகிய மயிரினை; காய்பொன் கொம்பனார் கன்னியர் ஆயிரர் - உருக்கிய பொன்னாலாகிய கொம்பு போன்றவராகிய கன்னியர் ஆயிரவர்; பொன் இயல் படலிகை ஏந்தி - பொன்னாலாகிய தட்டிலே ஏந்தி : நன்னிலம் படாமையே அடக்கி - பள்ளியில் வீழாமற் கொண்டு போய் அடக்கி; நங்கைமார் தொன் மயிர் உகுத்த நன் மயிலின் தோன்றினார் - அந் நங்கையர் பழைய மயிரை உகுத்த அழகிய மயிலைப்போல் தோன்றினார்.

 

   (வி - ம்.) 'அடக்கி' என்னும் வினையெச்சம் பிறவினைகொண்டது.

 

   காய்பொன் : வினைத்தொகை. படலிகை - தட்டு. பொன்மயிர் - அழகிய மயிர். படாமையே என்புழி ஏகாரம் : அசை.

( 40 )
2639 பொற்குடந் திருமணி பொழியப் பெய்தபோ
லெற்புடம் பெண்ணிலாக் குணங்க ளானிறைத்
துற்றுட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினார்
முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார்

   (இ - ள்.) முற்றுடன் உணர்ந்தவன் அமுதன் முன்னினார் - முற்றும் ஒருங்கே உணர்ந்த இறைவன் நூலாகிய அமுதத்தினைப் பொருந்திய அவ் வரிவையர்; பொற்குடம் திருமணி பொழியப் பெய்தபோல் - பொற்குடத்திலே அழகியமணிகளை மிகுத்து வழிய நிரப்பினாற்போல; என்பு உடம்பு எண் இலாக் குணங்களால் நிறைத்து - என்பாலாகிய உடம்பை அளவற்ற நற்பண்புகளால் நிறைத்து; உயிர்க்கு உடன் உற்று அருள் பரப்பி ஓம்பினார் - பல்லுயிர்க்கும் (வந்த துன்பங்களை) உடன் பொருந்தி அவ்வுயிர்கட்கு அருளைப் பரப்பித் (தவத்தைப்) பேணினார்.

 

   (வி - ம்.) தவம் புரிந்து அடங்கத்தக்க நல்வினை யுடைமையிற் பொற்குடத்தோடு உவமித்தார்.

( 41 )
2640 புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சன
மிகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூ
லகழ்ந்துகொண் டரும்பொருள் பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினார்.

   (இ - ள்.) பொற்பு இல் பல்சனம் - பொலிவு அறியாத பல மக்களும்; புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் - புகழ்ந்து கூறுவதால் மகிழ்ச்சியும்; இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி - இகழ்ந்து கூறுவதால் வருத்தமும் இல்லாமல்; அங்க நூல் அரும்பொருள் அகழ்ந்துகொண்டு பொதித்த நெஞ்சினார் - அங்கத்தையுடைய ஆகமத்தின் பொருளைக் கல்லி எடுத்துக்கொண்டு பொதிந்து.