பக்கம் எண் :

                   
முத்தி இலம்பகம் 1497 

விரும்பி இருப்பேனெனின்; எனக்குப் பழி என்று ஒழியும்? - எனக்குப் பிறக்கும் பழி எப்போது நீங்கும்?; என இலங்கு செம்பொன் குன்றனான் குளிர்ப்பக் கூறி - என்று விளங்கும் பொன் மலை போன்ற அவன் மனங்குளிர உரைத்து; கோயில் புக்கு அருளுக என்றாள் - இனி அரண்மனைக்குப் போய் உலகைக் காத்தருள்க என்றாள்.

 

   (வி - ம்.) கணவன் இறக்கவும் புதல்வன் அரசை உவந்திருந்தாளென்ற பழி நேர்ந்தது போக என்பாள், 'சென்றதோ செல்க' என்றாள்.

 
2648 பந்தட்ட விலலி னார்தம்
  படாமுலை கிழித்த பைந்தார்
நந்தட்டன் றன்னை நோக்கி
  நங்கையா ரடிகள் சொன்னார்
நொந்திட்டு முனிய வேண்டா
  துறந்தில நும்மை யென்னக்
கந்தட்ட திணிதிண் டோளான்
  கற்பக மலர்ந்த தொத்தான்.

   (இ - ள்.) பந்து அட்ட விரலினார்தம் - பந்தை வருத்தின விரலையுடைய மகளிரின்; படாமுலை கிழித்த பைந்தார் நந்தட்டன் தன்னை நோக்கி - சாயாத முலைகள் கிழித்த மாலையணிந்த நந்தட்டனைப்பார்த்து; நங்கையர் அடிகள் சொன்னார் - விசயமா தேவியார் கூறினார்; நும்மைத் துறந்திலம் - உம்மை யாம் நீக்கிலம்; நொந்திட்டு முனிய வேண்டா என்ன - (ஆதலால்) வருந்தி வெறுத்தல் வேண்டா என்றுரைக்க; கந்து அட்ட திணி திண்தோளாளன் கற்பகம் மலர்ந்தது ஒத்தான் - தூணைத் தாக்கிய மிகவும் திண்ணிய தோளான் (நந்தட்டன்) கற்பகம் மலர்ந்ததைப்போல மகிழ்ந்தான்.

 

   (வி - ம்.) அட்ட - வருத்தின. நங்கையாரடிகள் : விசயை . நொந்திட்டு - நொந்து. முனிய - வெறுக்க. கந்து - தூண். திணிதின்தோள் - மிகவும் திண்ணிய தோள். தோளான் : நந்தட்டன்.

( 50 )
2649 துறந்த விந்நங்கை மார்தந்
  தூம லரனைய பாத
முறைந்தவென் சென்னிப் போதின்
  மிசையவென் றொப்ப வேத்திக்
கறந்தபா லனைய கந்திக்
  கொம்படுத் துருவப் பைம்பூண்
பிறங்குதார் மார்பன் போந்து
  பெருமணக் கோயில் புக்கான்.